
செய்திகள் மலேசியா
அன்றாட தொற்று எண்ணிக்கை குறைந்தால் SOP-கள் மறு ஆய்வு செய்யப்படும்: இஸ்மாயில் சப்ரி
கோலாலம்பூர்:
அன்றாடம் பதிவாகும் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகும் பட்சத்தில் முழு முடக்க நிலைக்கான SOP-கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்துள்ளார்.
அடுத்த இரு வாரங்களில் SOP-கள் நீட்டிக்கப்படுமா அல்லது தளர்த்தப்படுமா என்பது முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
தொற்று எண்ணிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சுதான் இலக்கு நிர்ணயித்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், நாடு முழுவதும் தொற்று விகிதத்தை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
"சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபாவும் அந்த அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாமும் அன்றாட தொற்றுச் சம்பவங்கள் 4 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகும் பட்சத்தில் MCO குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என்று என்னிடம் தெரிவித்தனர். இதனால் MCO முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று அர்த்தமல்ல. SOP-கள் தளர்த்தப்படுமா நீட்டிக்கப்படுமா என்பது மட்டுமே முடிவு செய்யப்படும்.
"நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்குக் கீழ் தொற்று எண்ணிக்கை பதிவாகும் பட்சத்தில் அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து சுகாதார அமைச்சு, தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் தெரிவிக்கும். முழு முடக்க நிலை முடிவுக்கு வரும் என்று நாங்கள் வாக்குறுதி அளிக்கவில்லை," என்றார் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி.