
செய்திகள் மலேசியா
தனியார் பங்களிப்புடன் தினமும் 145,000 தடுப்பூசிகள் போடப்படும்: கைரி ஜமாலுதீன்
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் தனியார் மருத்துவர்கள் (மருத்துவ பயிற்சியாளர்கள்-Private medical practitioners ) மூலம் தினந்தோறும் 145,000 தடுப்பூசிகள் போடப்பட இருப்பதாக அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
ஜூலை முதல் இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வரும் என்றும் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இவ் வாரம் தனியார் பங்களிப்பின் மூலம் நாள்தோறும் 60 ஆயிரம் ஊசிகள் செலுத்தப்படும். ஜூன் 23ஆம் தேதி இந்த எண்ணிக்கை 78 ஆயிரமாக அதிகரிக்கும்.
எதிர்வரும் ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கையானது நாள்தோறும் 145,000 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்," என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள Protect Health நிறுவனத்திடம் தடுப்பூசி போடும் நடவடிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். அந்த நிறுவனத்தின் கீழ் பதிவு செய்துள்ளவர்களே தடுப்பூசிகளைச் செலுத்தமுடியும். ஒவ்வொரு தடுப்பூசிக்கும் தனியார் மருத்துவர்களுக்கு 14 ரிங்கிட்டும் protect health நிறுவனத்துக்கு 1 ரிங்கிட்டும் அளிக்கப்படும்.
பயிற்சி அளித்தல், தடுப்பூசி நடவடிக்கையை மேற்பார்வையிடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதால் இந்த ஒரு ரிங்கிட் கட்டணம் அளிக்கப்படுவதாக கைரி ஜமாலுதீன் மேலும் தெரிவித்தார்.