
செய்திகள் மலேசியா
அக்டோபருக்குள் நாடாளுமன்றம் கூட வாய்ப்பு: பிரதமர் அறிவிப்பு
புத்ராஜெயா:
எதிர்வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் நாடாளுமன்றம் மீண்டும் கூட வாய்ப்புள்ளதாக பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
எனினும், கடும் SOPக்களுக்கு உட்பட்டே நாடாளுமன்றம் கூடும் என்று இன்று தேசிய மீட்புத் திட்டம் தொடர்பாக உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.
"கொரோனா தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் வரும் பட்சத்தில், மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்ற நிலையை எட்டிப்பிடித்தவுடன் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு இயங்க வேண்டும் என்பதுதான் தொடக்கம் முதலே எனது நிலைப்பாடாக இருந்து வருகிறது.
"எனவே, தற்போதைய நிலையில் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நாடாளுமன்றம் கூடும் எனும் உறுதியை அளிக்க விரும்புகிறேன்," என்றார் பிரதமர்.
நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசியல் அமைப்பு முடியாட்சியின் கொள்கைகளை தாம் தொடர்ந்து நிலைநிறுத்தப் போவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
"எனவே, வேண்டும் என்றே மக்கள் மத்தியில் பதற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்த சில குழுக்கள் முயற்சி செய்ய வேண்டாம். இதனால் நிலைமை மோசமாகும். மாறாக, மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவ வேண்டும்," என்று பிரதமர் மொஹிதின் யாசின் மேலும் தெரிவித்துள்ளார்.
அவசர நிலை அமலில் இருப்பதால் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறவில்லை.
இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கூட்டி கொரோனா நெருக்கடி நிலை குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், இதர விஷயங்கள் குறித்து அரசாங்கம் வெளிப்படையான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந் நிலையில், நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு குறித்து பிரதமர் இன்று பேசியுள்ளார்.