
செய்திகள் மலேசியா
மீண்டும் 100ஐ கடந்த மரண எண்ணிக்கை: 6,831 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்
கோலாலம்பூர்:
மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மீண்டும் 100ஐ தாண்டியது.
இதே வேளையில் கொரோனா தாக்கத்தில் இருந்து மீ்ண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது ஆறுதலுக்குரிய தகவல்.
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 101 பேர் கிருமித்தொற்றுக்குப் பலியாகிவிட்டதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு கடந்த ஜூன் 2ஆம் தேதியன்று நாட்டில் ஆக அதிகமாக 126 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு மரண எண்ணிக்கை மீண்டும் 100ஐ கடந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சிலாங்கூரில் அதிகபட்சமாக 50 பேரும், கோலாலம்பூரில் 11 பேரும் மாண்டுள்ளனர்.
இதற்கிடையே இன்று கிருமித்தொற்றில் இருந்து 6,831 பேர் குணமடைந்துள்ளனர். இது புதிய தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகும்.
மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள 450 நோயாளிகளுக்கு சுவார உதவி தேவைப்படுவதாகவும், இன்று புதிதாக 19 கிருமித்தொற்றுத் திரள்களை கண்டறிந்துள்ளதாகவும் டாக்டர் நூர் ஹிஷாம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.