
செய்திகள் மலேசியா
அவசரகால பயன்பாட்டுக்காக மேலும் மூன்று தடுப்பூசிகளுக்கு அனுமதி
கோலாலம்பூர்:
அவசரகால பயன்பாட்டுக்காக பெரியவர்களுக்கு செலுத்தும் இரண்டு தடுப்பூசிகளுக்கும், குழந்தைகளுக்கான ஒரு தடுப்பூசிக்கும் அரசாங்கம் அனுமதி வழங்கி உள்ளது.
Cancino, Johnson and Johnson தடுப்பூசிகள் பெரியவர்களுக்கும், ஃபைசர் தடுப்பூசி 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் செலுத்தப்பட உள்ளன.
கான்சினோ (Cansino) சீனாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசி என்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்றும் தெரியவந்துள்ளது.
இன்று நடைபெற்ற மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையக் கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி செலுத்த அரசாங்கம் அனுமதி வழங்கி உள்ளது.
"கூடுதல் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டாலும் எளிதில் நோய் தொற்றும் ஆபத்து உள்ளவர்களுக்கே தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு கருதுகிறது.
"கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளின் தரம், பாதுகாப்பு, வீரியம் ஆகிய அம்சங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, அண்மைய தரவுகளை ஆராய்ந்த பிறகே அனுமதி வழங்கப்பட்டுள்ளது," என்று நூர் ஹிஷாம் கூறியுள்ளார்.
ஃபைசர் தடுப்பூசிகளை 12 வயது குழந்தைகள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு பயன்படுத்தலாம் என கடந்த மே 6ஆம் தேதி உலகின் முதல் நாடாக கனடா அனுமதி அளித்தது. இதையடுத்து மே 11ஆம் தேதி அமெரிக்காவும், மே 18ஆம் தேதி சிங்கப்பூரும் அனுமதி அளித்தன.
12 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசியைச் செலுத்தலாம் என ஐரோப்பிய மருந்து முமையும் அனுமதி அளித்துள்ளது.