
செய்திகள் மலேசியா
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வலுவான அரசாங்கம் தேவை: மாமன்னர்
கோலாலம்பூர்:
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வலுவான அரசாங்கம் தேவை என மாமன்னர் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற மலாய் ஆட்சியாளர்களுடனான கலந்துரையாடலுக்குப் பின் அரண்மனைக் காப்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றம் முக்கிய தளமாக விளங்குகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அரசியல் தலைவர்கள், சுயாதீன சிறப்புக் குழு, அரசு முகமைகளைச் சார்ந்த நிபுணர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்னர், இயன்ற விரைவில் நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த வேண்டும் என மாமன்னர் கருதுகிறார்.
"இதன் மூலம் அவசரகால சட்டங்கள் மற்றும் தேசிய மீட்சித் திட்டம் ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியும் என மாமன்னர் கருதுகிறார்," என அரண்மனைக் காப்பாளர் Ahmad Fadil Shamsuddin இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தொற்று நெருக்கடியை எதிர்கொள்வதிலும், பொருளாதாரத்தை மீட்கவும் திறம்படச் செயல்படக்கூடிய வலுவான, உறுதியான ஓர் அரசாங்கம் தேவை என்பதை மாமன்னர் அடிகோடிட்டுள்ளார்.
"முக்கிய விவகாரங்கள், குறிப்பாக பெருந்தொற்று தொடர்பிலானவை குறித்து விவாதிக்க நாடாளுமன்றம் தான் மிக முக்கியமான தளம் என்பதை மாமன்னர் நன்கு அறிந்துள்ளார்," என அரண்மனை காப்பாளர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் கூடும் பட்சத்தில், தேவை உள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு அரசாங்கம் ஒதுக்கியுள்ள செலவினங்களுக்கான தொகை குறித்தும், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதிக்க இயலும் என மாமன்னர் கருதுவதாகவும் அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.