
செய்திகள் மலேசியா
அவசர நிலையை நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை: மலாய் ஆட்சியாளர்கள் முடிவு
கோலாலம்பூர்:
எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் தேதிக்குப் பிறகு தற்போது அமலில் உள்ள அவசரநிலையை நீட்டிக்க வேண்டாம் என மலாய் ஆட்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இன்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரச முத்திரைக் காப்பாளர் டான்ஸ்ரீ சைட் டேனியால் சைட் அகமட் (Syed Danial Syed Ahmad) தெரிவித்துள்ளார்.
இன்றைய கூட்டத்தில் ஏழு பரிந்துரைகளை மலாய் ஆட்சியாளர்கள் முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"மக்களின் வாழ்வுக்கும் வாழ்வாதாரங்களுக்கும்தான் மற்ற அனைத்தையும் விட முன்னுரிமை அளிக்க வேண்டும். நாடாளுமன்றம் உடனடியாக கூட்டப்பட வேண்டும் என்ற மாமன்னரின் நிலைப்பாட்டுக்கு மலாய் ஆட்சியாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், மாநில அளவில் சட்டமன்றங்களும் கூட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
"பெருந்தொற்றுக் காலத்தில் நாடாளுமன்ற நடவடிக்கைகளை பல நாடுகள் எவ்வாறு கையாண்டனவோ, அந்த வழிமுறைகளை மலேசியாவில் அறிமுகப்படுத்தி தொடர்ந்து பின்பற்ற வேண்டும். தேசிய தடுப்பூசித் திட்டம் மேலும் மேம்படுத்த வேண்டும். 80 விழுக்காடு மந்தை நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற வேண்டும் என்ற நோக்கம் இயன்ற விரைவில் சாத்தியமாக வேண்டும்," என மலாய் ஆட்சியாளர்கள் வலியுறுத்தியதாக Syed Danial Syed Ahmad கூறியுள்ளார்.
மேலும், கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை மக்கள் நன்கு புரிந்துகொண்டு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் ஏதேனும் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என்று சந்தேகங்களை மக்கள் எழுப்பாத வகையில் இத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் மலாய் ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
"கொரோனா தொற்றை முறியடிக்கும் நடவடிக்கைகள் மக்களின் முழு ஒத்துழைப்போடு செயல்படுத்தப்பட வேண்டும். நாட்டில் நிலவும் அரசியல் வெப்பநிலை குறைக்கப்பட வேண்டும். பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையும் ஆதரவையும் பெற்ற நிலையான அரசாங்கம் வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை ஆட்சியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்," என்று Syed Danial Syed Ahmad மேலும் குறிப்பிட்டுள்ளார்.