
செய்திகள் மலேசியா
முடியாவிட்டால் பிரதமர் பதவி விலகட்டும்: எதிர்க்கட்சிகள் வலியுறுத்து
கோலாலம்பூர்:
நாடாளுமன்றக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டவேண்டும் என பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.
நடப்பு அரசாங்கம் இதைச் செய்யத் தவறும் பட்சத்தில் பதவி விலகவேண்டும் என்றும் அக்கூட்டணியின் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், நாடாளுமன்ற கூட்டம் தொடர்பாக மாமன்னர் தெரிவித்த கருத்தை வரவேற்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
" நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டால் அது மாமன்னரின் உத்தரவை மீறுவதாக கருதப்படும். மேலும் அரசாங்கத்தை வழிநடத்துவதற்கான நம்பிக்கையை இழந்துவிட்டதாக அர்த்தமாகிவிடும். மாமன்னரின் கருத்தை செயல்படுத்த மறுக்கும் பட்சத்தில் பிரதமர் கௌரவமாக பதவி விலகவேண்டும்," என்றும் நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
முன்னதாக எதிர்வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்ட வாய்ப்புள்ளதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றம் கூட்டப்பட கூட்டப்பட வேண்டுமெனில் 28 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என விதிமுறை உள்ளது. எனவே, உடனடியாக இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.