
செய்திகள் மலேசியா
இது போலித்தனமான அறிக்கை: நஜிப் துன் ரசாக் காட்டம்
கோலாலம்பூர்:
நாடாளுமன்றக் கூட்டத்தை மீண்டும் கூட்டுவதற்காக அரசாங்கம் அனைத்துவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை போலித்தனமானது என முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத்துக்கான அறிவிப்பை வெளியிடாதவரை பிரதமர் அலுவலகத்தின் அறிக்கை போலியானதாகவே கருதப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
"வழக்கமான இயல்புநிலையின் போது நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு 28 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிட வேண்டும். எனினும், அவசரநிலையின் போது இதில் இருந்து விலக்கு அளிக்கலாம்.
"கொரோனா SOPக்களைப் பின்பற்றாதவர்களுக்கு பத்து மடங்கு அபராதம் விதிப்பது, பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்கு ஒரு லட்சம் ரிங்கிட் அபராதம் விதிக்கும் சட்டத்தை அமல்படுத்துவது ஆகியவற்றுக்காக அவசரகால சட்டங்கள் இயற்றப்பட்டன. அதேபோல், நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட முடியும்," என்று முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என அவர் சார்ந்துள்ள அம்னோ கட்சியும் வலியுறுத்தி உள்ளது.