
செய்திகள் மலேசியா
2021ஆம் ஆண்டு முடிவுக்குள் மலேசியா மந்தை எதிர்ப்பு சக்தி கொண்ட நாடாகும்: நூர் ஹிஷாம் நம்பிக்கை
கோலாலம்பூர்:
2021ஆம் ஆண்டு முடிவுக்குள் மலேசியா மந்தை எதிர்ப்பு சக்தி கொண்ட நாடாக மாறிவிடும் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
அநேகமாக நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்துக்குள் இந்த இலக்கை எட்ட முடியும் என அவர் கூறியதாக அஸ்ட்ரோ அவானி தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள தேசிய அளவிலான திட்டங்கள் மற்றும் தடுப்பூசி போடும் பணியின் விரிவாக்கங்களையும் கவனத்தில் கொண்டு பார்க்கும்போது தம்மால் இத்தகைய முடிவுக்கு வர முடிவதாக நூர் ஹிஷாம் கூறியுள்ளார்.
"தற்போது தடுப்பூசி பணிதான் முக்கியமானது. தடுப்பூசி போடப்படும் விகிதம் அதிகரிக்க இரண்டு அல்லது மூன்று மாத அவகாசம் அளிக்கப்பட வேண்டும். அதன் முடிவில் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைய இயலும்.
"அதன் பின்னர் பள்ளிவாசலுக்குச் செல்வது, இதர சமய நிகழ்வுகளில் பங்கேற்பது ஆகியவற்றுக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன போன்ற முன்னெடுப்புகளை நாம் அமல்படுத்தலாம். பள்ளிவாசல் நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை அனுமதிக்க இது உகந்த நேரமல்ல.
"தற்போது பத்து விழுக்காட்டுக்கும் குறைவான மலேசியர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பதுதான் பிரச்சினை. இப்போதே சில நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிப்பது மக்களை கோபத்தை ஏற்படுத்தக்கூடும்.
"எனவேதான் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது தவணையைச் செலுத்திக்கொண்ட பிறகு மாநிலங்களுக்கு இடையே அல்லது அனைத்துலகப் பயணங்களை மேற்கொள்ள அனுமதிப்பது சரியாக இருக்கும்.
"மேலும், மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கும் கூட தடுப்பூசி கடப்பிதழ் அவசியம் என்பதை நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்," என்றார் டாக்டர் நூர் ஹிஷாம்.