
செய்திகள் மலேசியா
நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பாக ஆராய குழு அமைக்கப்படும்: பிரதமர்
புத்ராஜெயா:
நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பாக ஒரு குழு அமைக்கப்படும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
அந்தக் குழுவில் அரசு மற்றும் எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் இடம்பெற்றிருப்பார்கள் என்றும் நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்பு கவனிக்கப்பட வேண்டிய பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து அக்குழு ஆராயும் என அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத்தை எந்த வகையில் நடத்துவது என்பதையும் குழு பரிசீலிக்கும்.
நாடாளுமன்ற கூட்டத்தை ஒத்திவைப்பது தமது நோக்கமல்ல என்று குறிப்பிட்ட அவர் , எனினும் சில முக்கிய விவகாரங்களுக்கு முன்கூட்டியே தீர்வு காணவேண்டும் என்பது அவசியம் என்றார்.
"இதுகுறித்து நான் அணுக்கமாக கவனித்து வருகிறேன். பிரதமராக எனது செயல்பாடுகளும் அரசாங்க நடவடிக்கைகளும் அரசியல் அமைப்புக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும் என சட்ட அமைச்சர் மட்டுமன்றி அட்டர்னி ஜெனரலும் ஆலோசனை வழங்கி உள்ளனர். எனவே நாடாளுமன்றக் கூட்டத்தை உறுப்பினர்கள் அனைவரும் நேரடியாக பங்கேற்கும் வகையில் நடத்துவதா அல்லது வேறு வகையில் நடத்துவதா என்பது குறித்து விதிகளின்படி முடிவெடுக்க வேண்டும்.
"மேலும், நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க அந்த அவை தயார் நிலையில் உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனெனில் அங்குள்ள இருக்கை அமைப்புகள், வசதிகள் அனைத்தும் நடப்பு SOPகளைப் பின்பற்றி அமைந்துள்ளனவா என்பதையும் கவனிக்க வேண்டும்.
"எனவே, இதற்கான குழுவில் உள்ள அரசாங்க மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களிடம் இதுகுறித்து ஆராயுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். எனவே, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு அவர்கள் தயாரா இல்லையா என்பதை என்னிடம் தெரிவிப்பர்.
"தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமையை அரசு மறுப்பதாகவோ அல்லது மாமன்னரின் கருத்துகளுக்கு எதிராகச் செயல்படுவதாகவோ யாரும் கருதிவிடக்கூடாது. அந்த வகையில் தற்போதைய நிலைமையை மக்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.
"ஒரு பிரதமராக எனது கடமைகளைப் புரிந்து கொண்டுள்ளேன்," என்று பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதீன் கூறியுள்ளார்.