
செய்திகள் மலேசியா
பிறந்தநாள் கொண்டாட்டம்: சபாவில் புதிய தொற்றுத் திரள்; 19 பேர் பாதிப்பு
கூச்சிங்:
பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வின் மூலம் சபா மாநிலத்தில் புதிய கொரோனா தொற்றுத்திரள் (cluster) உருவாகி உள்ளது.
மொத்தம் 19 பேருக்கு கிருமி தொற்றியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
MCO 3.0 காலகட்டத்தில் ஒன்றுகூடல் நிகழ்வுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனினும் SOPக்களை மீறுவது வழக்கமாகி வருகிறது.
கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 60 வயது ஆடவருக்கு முதலில் கிருமி தொற்றியது. இதையடுத்து உருவான தொற்றுத்திரளில் 19 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
அந்த முதியவருக்கு The Apas Balung health clinic இல் கடந்த 16ஆம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியானது. முன்னதாக ஜூன் 13ஆம் தேதி முதல் அவருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் ஏற்பட்டன.
இதையடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ஒன்பது பேருக்கு ஜூன் 20ஆம் தேதி தொற்று உறுதியானது. இவர்கள் அனைவரும் பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்றவர்கள் ஆவர்.
அதன் பின்னர் மேலும் ஒன்பது பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சபாவில் நேற்று புதிதாக 166 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 67,707ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 468 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,116 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.