
செய்திகள் மலேசியா
புதிய மைல்கல்: ஒரே நாளில் 250,000 பேருக்கு தடுப்பூசி
கோலாலம்பூர்:
கொரோனா தடுப்பூசி போடுவதில் மலேசியா புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.
நேற்று ஒரே நாளில் சுமார் 250,000 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இத்தகவலை சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார்.
நேற்று 250,529 தடுப்பூசிகள் போடப்பட்டதாக குறிப்பிட்ட அவர், அவற்றுள் 190,244 தடுப்பூசிகள் முதல் தவணையாக பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டது என்றார்.
60,285 ஊசிகள் இரண்டாவது தவணைக்காக காத்திருந்தவர்களுக்கு போடப்பட்டது.
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்றுதான் மிக அதிக அளவில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கடந்த திங்கட்கிழமை ஜூன் 21ஆம் தேதி 235,623 தடுப்பூசிகள் போடப்பட்டன. நாட்டில் ஒட்டுமொத்தமாக செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6,301,727 ஆகும்.
இதுவரை 4,574,685 பேர் முதல் தவணை ஊசி போட்டுக் கொண்டுள்ளனர். 1,727,042 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று புதன்கிழமை தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் ஆதம் பாபா.
தற்போதைய தகவலின்படி, நாடு முழுவதும் 5.3 விழுக்காடு பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஆகஸ்ட் மாதம் தினமும் நான்கு லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதின் தெரிவித்துள்ளார்.
ஜூலை மாத மத்தியில் நாட்டில் பத்து விழுக்காட்டினருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதும் அரசாங்கத்தின் மற்றொரு இலக்கு என அவர் கூறியுள்ளார்.