
செய்திகள் மலேசியா
ஜோகூரில் மந்தமான தடுப்பூசி வினியோகம்; ஏமாற்றமளிக்கிறது: ஜோகூர் சுல்தான் இப்ராஹீம்
ஜோகூர் பாரு:
ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் அல்மர்ஹம் சுல்தான் இஸ்கந்தர், கோவிட் -19 தடுப்பூசி வினியோகம் மாநிலத்தின் மெதுவான வீதத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டு இது தனக்கு ஏமாற்றத்தைத் தருவதாகக் குறிப்பிட்டார்.
ஜோகூருக்கு தடுப்பூசி வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என்றார் அவர். தடுப்பூசி விநியோகத்தை அதிகரித்தால்தான் அதனைப் பரவலாக மக்களுக்கு வழங்க முடியும் என்று மத்திய அரசை அவர் வலியுறுத்தினார்.
ஏனெனில் இன்றுவரை, மாநிலத்தின் 3.78 மில்லியன் மக்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே தேசிய கோவிட் -19 நோய்த் தடுப்பு திட்டத்தின் மூலம் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர்.
"தடுப்பூசி விகிதம் இவ்வளவு நாட்கள் கடந்தும் குறைவாகவே அளிக்கப்பட்டுள்ளது, உடனடியாக இதனை மேம்படுத்தப்பட வேண்டும்.
"ஜோகூர் அரசாங்கமும் மருத்துவ ஊழியர்களும் ஒரு நாளைக்கு 50,000 தடுப்பூசிகளை செலுத்தத் தயாராக உள்ளனர். இரண்டு மாதங்களுக்குள் மாநிலத்தில் 50 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடும் இலக்கு எங்களுக்கு உள்ளது" என்று ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இன்று தனது அதிகாரப்பூர்வ முக நூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
"பணியிடங்கள், தொழில்துறை பகுதிகள் மற்றும் கட்டுமானத் தளங்களில் ஏற்படும் நோய்த்தொற்றுகளினால் தினசரி கோவிட் -19 தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது" என்றும் சுல்தான் இப்ராஹிம் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
"69 சதவீத புதிய தொற்றுகள் சமூகத்திற்குள் பரவலாக உள்ளன என்ற புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்று புரிந்து கொள்ள வேண்டும்".
“எல்லா மக்களுக்கும் உடனடியாக தடுப்பூசி போடுவதே இதற்கான சிறந்த தீர்வு. தடுப்பூசியை நடைமுறைப்படுத்திய பல நாடுகளில் இது வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றார் ஜோகூர் சுல்தான்.
இதற்கிடையில், ஜோகூர் சுகாதாரத் துறையின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு விளக்கப்படத்தின்படி, ஜூன் 20 ஆம் தேதி வரை மொத்தம் 530,193 தடுப்பூசி மருந்துகள் மாநிலத்தில் வழங்கப்பட்டுள்ளன.
மொத்தத்தில் 370,186 முதல் அளவாகவும் (டோஸ்), 160,007 இரண்டாவது டோஸாகவும் இருந்தன.