
செய்திகள் மலேசியா
மேலும் ஒரு பொருளாதார ஊக்குவிப்புத் உதவித் திட்டம் பிரதமரால் விரைவில் அறிவிக்கப்படும்: கைரி ஜமாலுதீன்
கோலாலம்பூர்:
மக்களுக்கு உதவும் வகையில் மேலும் ஒரு பொருளாதார ஊக்குவிப்புத் உதவித் திட்டம் பிரதமரால் விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
எனினும் அதுகுறித்த மேலதிக விவரங்களை தற்போது தெரிவிக்க இயலாது என்று அவர் குறிப்பிட்டார்.
நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவரிடம், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வர போராடும் தொழில்களுக்கு உதவும் வகையில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்தபோதே அமைச்சர் கைரி பிரதமர் புதிதாக அறிவிக்க உள்ள மிகப்பெரிய உதவித் தொகுப்புப் பற்றிக் குறிப்பிட்டார்.
முன்னதாக கடந்த மே 31ஆம் தேதி 40 பில்லியன் ரிங்கிட் உள்ள உதவித் தொகுப்பை, முழு முடக்க நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அறிவித்திருந்தார் பிரதமர். மேலும், இதற்கு முன்பு 340 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மேலும் பல பொருளாதார ஊக்குவிப்பு, உதவி தொகுப்பை நடப்பு அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
இந் நிலையில் பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதீன் யாசின் அறிவிக்க உள்ள புதிய உதவித் தொகுப்பு குறித்து அறிய பல்வேறு தரப்பினரும் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையே, நடப்பாண்டு மலேசியா 4.5 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை எட்டிப் பிடிக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. ஏற்கெனவே அவ் வங்கி இத்தகைய ஒரு கணிப்பை வெளியிட்டிருந்தது.