நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

எம்ஜிஆர் தந்த முத்தமும் எழுதத் தந்த பேனாவும்: இயக்குநர் சக்திவாசன் மனந்திறந்த கலந்துரையாடல்

இயக்குநர் சக்திவாசன் மனந்திறந்த கலந்துரையாடல்


மாஸ்டர் தினேஷ் நாயகனாக நடித்த ‘நாயே பேயே' படம் அண்மையில் ரிலீஸ் ஆனது. ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகி அன்றும் அடுத்த நாளும் என ஆறு காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்ட நிலையில் கொரோனா ஊரடங்கினால் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில், இரண்டு நாட்கள் மட்டுமே ஓடியது என்கிற நிலையில், அதன் இயக்குநர் சக்திவாசனை சந்தித்தோம்.

‘‘படம் ரிலீஸ் ஆகி இரண்டு நாட்கள்தான் ஓடியது. அதன்பிறகு, கொரோனா பரவலின் அதிகரிப்பால் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளால் தியேட்டர்கள் மூடப்பட்டன. அடுத்தடுத்த நாள்படம் ஓடும் என்றிருந்த எதிர்பார்ப்பு தடைப்பட்டது. எப்படி உணர்ந்தீர்கள்?''

‘‘இந்தக் கொரோனா கொடூரத்தின் பிடியில் இருந்து எல்லா மக்களும் காப்பாற்றப்படணும்... பாதுகாக்கப்படணும் என்பதுதான் எனது முதல் பிரார்த்தனை சார். ஊர்கூடி தேர் இழுக்கணும்னு சொல்வாங்கல்ல அதுமாதிரி, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாம் எல்லோரும் ஒத்துழைக்கணும்ங்கறல எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை. படத்தை ரொம்ப சந்தோஷமாவும் கடின உழைப்போடும்தான் எடுத்தேன். படம் நல்லா வந்துச்சு. எல்லோரோட ஒத்துழைப்பும் ஆண்டவன் அருளால் நல்லபடி கிடைத்தது. படம் ரிலீஸாகி ரெண்டு நாள் ஆனநிலையில் கொரானாவால தியேட்டர்கள் மூடுவாங்கன்னு அதற்கு முன்பு நாம் எதிர்பார்க்காத ஒண்ணு. கட்டுப்பாடுகள் தொடர்பான அரசாங்கத்தோட ஆணையை நாம ஏத்துக்கிட்டுதான சார் ஆகணும். 

ஆனாலும், ரிலீஸ் ஆன ரெண்டு நாள்ல படத்துக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. பெரும்பாலும், எல்லாமே நேர்மறையான விமர்சனங்கள். அதுவே படத்தின் வெற்றிக்கான வாசலா அமைஞ்சுருக்கு. சூழல் சரியானப்புறம் நிச்சயமா படம் இன்னும் அதிகமா ரீச் ஆகும்ங்கற நம்பிக்கை கிடைச்சிருக்கு சார்.''

‘‘அதென்ன, ‘நாயே பேயே'ன்னு ஒரு டைட்டில்?'' 

‘‘சுமார் முப்பதுக்கும் மேற்பட்டவர்களிடம் ‘இப்படிக்கு விதி' என்ற டைட்டிலோடு ஒரு கதையை சொன்னேன். ஆனால், ஒருவரும் ஓகே சொல்லவில்லை என்பதுதான் அந்த விதியின் சோகம். விதி ரொம்பத்தான் சுத்த விடுதேன்னு நெனச்சேன். கதையைக் கேட்ட பெரும்பாலனவங்க, ‘‘இதெல்லாம் வேணாம் சார். இப்ப உள்ள ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி விலங்கோ, பேயோ பிரதானமா இருக்கிற மாதிரி கதை இருந்தா சொல்லுங்க பண்ணலாம்'' என்றார்கள். இந்த இடத்தில்தான் இப்படி ஒரு கதையை யோசிச்சேன். ‘நாயே பேயே'ன்னும் டைட்டில் வச்சேன். வேறொரு தயாரிப்பாளரை அறிமுகப்படுத்த வரச்சொன்ன எடிட்டர் கோபிகிருஷ்ணா சார் கதையைக் கேட்டு, ரொம்ப இம்ப்ரஸ்ஸாகி தானே தயாரிக்க முன்வந்தார். இப்படித்தான் தொடங்கி அமைந்தது இந்தப்பட வாய்ப்பு.''

‘‘உங்களைக் குறித்தும் திரைக்கு வந்த உங்களின் படப் பயணம் பற்றியும் சொல்லுங்களேன்.''

‘‘திருச்சிதான் எனது ஊர். ஐந்து அண்ணன்கள் நான்கு அக்காக்களுக்குப் பிறகு பத்தாவதாகப் பிறந்த கடைக்குட்டி தம்பி நான். கலகலப்பான பெரிய குடும்பம் எங்களுடையது. எங்க ஒவ்வொருத்தரோட திறமையையும் அறிந்து அதற்கேற்றார்போல் எங்கள் பாதையை செவ்வனே வகுத்துத் தந்தவங்க எங்க அப்பாவும் அம்மாவும். நான் கடைக்குட்டி என்பதால், அப்பா, அம்மாவைவிடவும் அண்ணன்களும் அக்காக்காக்காளும்தான் என்னை அதிகம் வளர்த்தவர்கள். அதிலும், என்னோட மூத்த அக்காவான காந்தி அக்காவும் அவரது கணவரான ரவி மாமாவும்தான் எனக்கு அம்மா, அப்பா போல. இப்ப வரைக்கும் அவங்களோட பிள்ளையாத்தான் என்னைப் பாத்துக்கறாங்க. என்னோட ஆறாவது வயதில் நிகழ்ந்த ஆச்சர்யம்தான் என்னை ஈர்த்து இன்று ஒரு திரைப்பட இயக்குநரா கொண்டு வந்து நிறுத்தியிருக்குன்னு சொல்லலாம்.

ஆமாம். எனக்குன்னு எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லை என்றாலும், எம்ஜிஆர் சாரின் ஸ்பரிஸம்தான் என்னை திரைத்துறைக்கு அழைத்து வந்த அச்சாரம் எனலாம்.  சின்ன வயசிலயே நல்லா பேசுவேன். அந்தப் பேச்சாற்றலை மேலும் மேலும் வளர்த்தெடுத்தவர்கள் என் உடன்பிறந்தவர்கள். ஆறு வயது சிறுவனாக இருக்கும்போது ஒரு பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றேன். மாவட்ட ஆட்சியரான சாந்தா ஷீலா நாயர் தலைமையில்தான் அந்த விழா நடந்தது. அவங்களுக்கு எனது பேச்சு ரொம்பவும் பிடிச்சுப் போச்சு. என்னை அதிகம் பாராட்டினாங்க. வாழ்த்தினாங்க. அந்த நிகழ்வுக்குப் பிறகு மறுநாள் காலையில் எங்க வீட்டு வாசலில் கலெக்டரோட அரசாங்க ஜீப் வந்து நின்றது. எங்க வீட்டில் உள்ளவங்களுக்கு மட்டுமின்றி தெருவில் உள்ளவங்களுக்கும் அரசாங்க ஜீப் வந்து நின்னதுல ஒருவித பதற்றம். ஆனால், அந்த ஜீப்பில் வந்திறங்கிய காவலர்கள், ‘‘கலெக்டரம்மா சக்தியை அழைத்துவரச் சொன்னார்கள். முதலமைச்சர் எம்ஜிஆர் கலந்துகொள்ளும் அரசு விழாவில் பேச வைப்பதற்காக'' என்று அந்த இனிப்பு செய்தியைச் சொல்லி பதற்றமான சூழலை ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக மாற்றினார்கள்.

அதன்பிறகு, அந்த அரசாங்க ஜீப்பில் ஏறிச்சென்று விழாவில் கலந்துகொண்டேன். எம்ஜிஆர் சார் வருவதற்கு முன்பாக என்னை மேடையில் பேசும் வாய்ப்பை வழங்கினார்கள். நான் பேசிக்கொண்டிருக்கும்போதே எம்ஜிஆர் சார் மேடைக்கு வந்துவிட்டார். எனது பேச்சை நிறுத்திக்கொள்ளச் சொன்னார்கள். ஆனால், எம்ஜிஆர் சார், ‘‘அந்த சிறுவனின் பேச்சைக் கேட்டுக்கொண்டேதான் வந்தேன். நன்றாக பேசுகிறான். அவனை முழுவதுமாக பேசச்சொல்லுங்கள்'' என்று என் பேச்சைத் தொடர வைத்தார். பேசி முடித்ததும், நிறைவில் எம்ஜிஆர் சார் என்னைப் பக்கம் அழைத்து, பாராட்டி என்னைத் தொட்டுத் தூக்கி அவர் மடியில் வைத்துக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டார். அதோடு, அவரது சட்டைப்பையில் இருந்த பேனாவை எடுத்து எனக்குப் பரிசளித்தார். அந்தப் பொன்மனச் செம்மலின் பொற்கரங்கள் என்னைத் தொட்டுத் தூக்கியதும் என்னுள் நான் அடைந்த ஆனந்த அதிர்வு அத்தனை அளவிடற்கரியது. அவர் முன்னிலையில் நான் பேசியது எனக்கு பொன்னாள். அதுதான் என் திரைப்பட ஆர்வத்தின் தொடக்கப்புள்ளி எனலாம்.''

‘‘படிப்பு மற்றும் முதல் படம் குறித்து சொல்லுங்களேன்?''

‘‘திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில்தான் இளங்கலை, முதுகலைப் படித்து முடித்தேன். எனக்கு விருப்பமான தமிழிலக்கியம்தான் பயின்றேன். ஆறு வயதில் தொடங்கிய பேச்சார்வம் கல்லூரி வரை தொடர்ந்தது. பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி என பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு 320-க்கும் மேற்பட்ட பரிசுகள் வென்றேன். அதேநேரம், படிப்பிலும் கோல்ட் மெடல் பெற்றேன். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் எங்கள் கல்லூரி முதல்வர், ‘‘சக்தி, நம்ம கல்லூரியிலேயே வேலைக்கு ஏற்பாடு செய்து தருகிறேன். இங்கேயே சேர்ந்துவிடு'' என்றார். ஆனால், ‘‘வேண்டாம் சார், நான் திரைப்பட இயக்குநராக விரும்புகிறேன். அதனால் சென்னை சென்று, அதற்காகப் படிக்கப் போகிறேன். மன மாற்றம் ஏற்பட்டால், நிச்சயம் இங்குதான் வருவேன். அப்போது வேலை கொடுங்கள்'' என்று சொல்லிவிட்டு சென்னைக்கு வந்து தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் திரைப்பட இயக்குநருக்கான டிஎஃப்டி படிப்பில் சேர்ந்தேன். இயக்குநர் கே.பாலசந்தர் சார்தான் என்னை நேர்காணல் செய்தார். அவர் என்னைத் தேர்வு செய்ததை எனக்கான முதல் வெற்றியாக எண்ணிக்கொண்டேன்.

பெரிய திரையில் ‘நாயே பேயே'தான் என் முதல் படம் என்றாலும், என்னை அடையாளப்படுத்தியது ‘தி ரியல் சல்யூட்' என்ற என் குறும்படம்தான். திரைப்படக் கல்லூரியில் இறுதியாண்டு பயின்றபோது, புராஜக்ட்டுக்காக ஒரு குறும்படம் பண்ண வேண்டும். அப்போது நான் எடுத்துக் கொண்ட லைனை நிராகரித்து விட்டார்கள். அந்த கான்சப்ட்டைத்தான் பண்ணுவேன் என்று எவ்வளவு போராடிப் பார்த்தேன். கல்லூரி வளாகத்தின் முன்பு தனியொருவனாக உண்ணாவிரதம் எல்லாம் இருந்து பார்த்தேன். ஆனால், எதற்கும் கல்லூரி செவிசாய்க்கவில்லை. ஆனாலும், படித்துமுடித்து வெளிவந்ததும் நான் விரும்பிய ‘தி ரியல் சல்யூட்' என்கிற அந்தக் குறும்படத்தை இயக்கினேன். இளையராஜா சார்தான் பாடலும் இசையும் கிரண்பேடிதான் நடித்தார். அந்த கான்செப்ட்டைக் கேட்ட இளையராஜா சார் ரொம்பவும் ரசித்தார். அதோடு, இதனை ஐந்து மொழிகளில் பண்ணச் சொன்னதும் அவர்தான். அத்தனைக்கும் அவர்தான் இசையமைத்தார். அந்தப் படம், பல்வேறு தரப்பில் 16 விருதுகளை அள்ளிக்குவித்தது.''

‘‘பேச்சிலும் கவிதையிலும் ஆர்வமுள்ள நீங்கள் நூல் எதுவும் எழுதி வெளியிட்டிருக்கிறீர்களா?''

‘‘கவிதைத் தொகுப்பு வெளியிட விருப்பம் இருந்தது. அதை கொஞ்சம் வித்தியாசமாக செய்யலாம் என்று கருதி, கவிதைகளை ஆடியோவாக பதிவு செய்து அதனைத் தொகுத்து, ‘ஒரு வீணை விறகாகிறது' என்று தலைப்பிட்டு வெளியிட்டேன். வைரமுத்து சாரின் எழுத்துகளின் மீது ஈர்ப்பு கொண்டு அதன் உந்துதலால் எழுத வந்தாலும் வாலி சாரும் என்னுள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். எனவே, என் கவிதைகளின் ஆடியோ தொகுப்புக்கு வாலி சார் அணிந்துரை வழங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். வாலி சாரும் என் தொகுப்புக்கு கவி அணிந்துரை வழங்கி, ஆசீர்வதித்தார். அது என் வாழ்வின் பெருமிதம்.''

‘‘உங்களின் இந்த முதல் படமான ‘நாயே பேயே'குறித்து சொல்லுங்களேன்''

‘‘முதலில் இந்தப் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை வழங்கிய கோபிகிருஷ்ணா சாருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிச்சுக்கணும். ஏன்னா, கதையைக் கேட்டதும், ‘‘நானே பண்றேன்'' என்று சொல்லி முன்வந்ததும் தினேஷ் மாஸ்டரை ஹீரோவாக கமிட் பண்ணினதும், படம் தொடங்கியதில் இருந்து முடிச்சு டீசர் வெளியிட்டு, இப்ப ரிலீஸ் ஆன வரைக்கும் சக்ஸஸ்ஃபுல்லா கொண்டுவந்த அவரது இன்வால்வ்மென்ட்டுக்கு எவ்வளவோ தேங்க்ஸ் சொன்னாலும் போதாது.

படத்தோட தலைப்பு ரொம்ப இயல்பா இருக்கு. ரொம்ப கேச்சிங்கா இருக்கு என்பதுதான் பெரும்பாலானோரின் பாசிட்டிவான கருத்து.

ரொம்ப ஜாலியான படம் சார் இது. படம் பார்த்த எல்லோரும் படத்தப்பத்தி சொல்லும்போது இப்படித்தான் ஆரம்பிக்கிறாங்க. தினேஷ் மாஸ்டர் நடிப்பு வேற லெவல்னு சொல்லலாம். ரொம்ப எஞ்சாய் பண்ணி நடிச்சார். அவரோட இன்வால்வ்மென்ட்டை படத்தைப் பார்த்த எல்லோருமே ரசிச்சுப் பாராட்டினாங்க. கதை ரொம்ப சிம்ப்ளா தெரிஞ்சாலும் கொஞ்சம் ஆழமா சிந்திக்கத் தோணும். நாயும் பேயும்தான் படத்தின் ஹைலைட். பணக்கார வீடுகளில் உள்ள விலையுயர்ந்த நாய்களைத் திருடி சொற்ப விலைக்கு விற்கும் கேரக்டர்ஸ்தான் ஹீரோவும் அவரது நண்பர்களும். சின்னச்சின்னத் திருட்டாகத்தான் எண்ணி இதைச் செய்கிற அவர்கள், ஒருகட்டத்தில் ஹீரோயினையே கடத்தும் பெரிய திருட்டில் ஈடுபடுகிறார்கள். ஆனால், அவர்கள் கடத்துவது பேயாக இருக்கும் ஹீரோயினை. ஹீரோ, பேயை கல்யாணம் செய்து கொள்வதுதான் படத்தின் மையக்கரு. அப்போது நடக்கும் த்ரில்லும் காமெடியும் ரொம்ப சுவாரசியமாக இருக்கும். படத்துக்கு நான்கு பாடல்கள் பிளான் பண்ணினோம். ஆனால், இரண்டு பாடல்கள்தான் வைக்க முடிந்தது. என்.ஆர்.ரகுநந்தன் இசையில் இரண்டு பாடல்களும் அற்புதமாக இருக்குங்கற ரெஸ்பான்ஸ் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. பாடல்களையும் நானே எழுதியுள்ளேன். 

‘மரணத்தில் முடியும் மானிட சுவாசம்...
மாலைக்குள் வாடும் மலர்களின் வாசம்...
நம் காதலின் தீப ஒளி,
எந்த நாளிலும் அணையாது...
சொன்னான் கவிஞன் பொய்யுமில்லை,
காதலை மரணம் கொல்வதில்லை...' - படத்தில் இடம்பெறும் இந்தப் பாடல் வரிகள் எல்லோராலும் பாராட்டுப் பெற்றுள்ளது... முணுமுணுக்கப்படுது. ‘காதலை மரணம் கொல்வதில்லை..' என்பதுதான் படத்தின் மையக்கருத்தே.''

‘‘படப்பிடிப்பின்போது நடந்த மறக்க முடியாத ஒரு சம்பவம் குறித்து கூறுங்களேன்.''

‘‘படத்தில் ஒரு முக்கியமான காட்சியை, செட் எல்லாம் போடாமல் நிஜ சுடுகாட்டிலேயே நைட் ஷூட் பண்ணினோம். எல்லாமே தத்ரூபமாக இருக்கும். செட் என்று போட்டதுன்னு பார்த்தால், டெட் பாடி வைக்கிற சவப்பெட்டி ஒண்ணு மட்டும்தான். சுடுகாட்டில் நாங்க ஷூட் பண்றதுக்காக செட் பண்ண பிணம் புதைக்க தோண்டப்பட்ட குழி, நிஜமாவே அன்று ஒரு பிணத்துக்காகத் தோண்டப்பட்டதுதான். அந்த இடத்தில் தண்ணீர் வந்துவிட்டதால், பக்கத்திலேயே வேறொரு குழிவெட்டி அதில் பிணத்தை புதைத்திருந்தார்கள். அதுவும் அன்றைக்கே புதைக்கப்பட்டிருந்ததால், பூக்கள் எல்லாம் ஃப்ரெஷ்ஷாகவே இறைந்து கிடந்தது.

காட்சிப்படி ஹீரோயின் குழிக்குள் வைக்கப்பட்டிருக்கும் பிணப் பெட்டிக்குள் படுக்க வேண்டும். இரவு நேரம், நிஜ சுடுகாடு... பக்கத்திலேயே அன்றைக்குதான் புதைக்கப்பட்ட பிணத்தின் மீது மூடியுள்ள மண் மேடு, அதன் மீது தூவப்பட்டிருக்கும் பூக்கள்.. இந்த சூழல் ஒருவித அச்சத்தை ஏற்படுத்த, காட்சிப்படி குழிக்குள் உள்ள சவப்பெட்டியில் இறங்கிப் படுக்க ஹீரோயின் ஐஸ்வர்யா, பயத்தினால் மாட்டேன் என்று சொல்லிவிட்டார். இந்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று சொன்னால் பேசி சம்மதிக்க வைக்கலாம். ஆனால், பயத்தில் மாட்டேன் என்று சொல்பவரை எப்படி சம்மதிக்க வைப்பது என்று புரியாமல் இருந்தபோது, நானே ஐஸ்வர்யாவிடம் பேசினேன். ‘‘பாருங்க மேடம். ஒண்ணும் பயப்படாதீங்க. ஒண்ணும் ஆகாது. நான் வேணும்னா முதலில் குழிக்குள் இறங்கி படுத்துக்காண்பிக்கிறேன் பாருங்க''  என்று சொல்லிவிட்டு, நான் குழிக்குள் இறங்கி சவப்பெட்டிக்குள் படுத்துக்கொண்டேன். மேல் பலகையை  மூடச்சொல்லிவிட்டேன். ஒரு இரண்டு நிமிடங்கள் நான் சவப்பெட்டிக்குள் இருந்தேன். அதன்பிறகு, வெளியில் வந்தேன். இதைப் பார்த்ததும், ஒருவழியாக தைரியமான ஐஸ்வர்யா, அதன்பிறகு குழிக்குள் இறங்கி சவப்பெட்டிக்குள் படுத்தார். காட்சியை சிறப்பாக எடுத்து முடித்தோம். படத்தில் இந்தக் காட்சியையும் அன்றைக்கு படப்பிடிப்பின்போது நடந்த இந்த த்ரில்லான அனுபவத்தையும் மறக்கவே முடியாது. அந்த சீனை பிளான் பண்ணும்போதே படக்குழுவில் பெரும்பாலானோர், ‘‘நிஜ சுடுகாடு.. இரவு நேரம்... இதெல்லாம் ரொம்ப ரிஸ்க்குங்க... வேணாம்.'' என்று சொன்னார்கள். ஆனால், நான் பிடிவாதமாக இதனை எடுத்து முடித்தேன். உள்ளுக்குள் பயம் இருந்தாலும் எல்லோரும் ஒத்துழைத்து இதனை எடுக்க உதவினார்கள். படத்தில் இந்த ஸீன் ரொம்ப த்ரில்லா இருக்கும்.''

‘‘அடுத்து என்ன?'' 

‘‘இந்தப் படத்தின் வேலைகள் நிறைவு பெறும் தருவாயிலேயே அடுத்த படத்துக்கான வாய்ப்பும் அமைந்திருக்கு. அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மகிழ்ச்சியாக இருக்கு. எல்லாம் ‘நாயே பேயே' படத்தின் பாசிட்டாவாகத்தான் கருதுகிறேன்'' என்று கூறி புன்னகையோடு கலந்துரையாடலை நிறைவு செய்தார் இயக்குநர் சக்திவாசன். வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றோம்.

- பி.ரியாஸ் அகமது

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset