
செய்திகள் மலேசியா
கொரோனா பாதிப்பால் 3 நாள்களில் 3 குடும்ப உறுப்பினர்களை இழந்த பெண் போலீஸ் அதிகாரி
கோலாலம்பூர்:
செந்தூல் மாவட்ட காவல்துறை பெண் அதிகாரியின் குடும்பத்தில் 3 நாட்களில் 3 பேர் அடுத்தடுத்து கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் காவல்துறையினரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தி உள்ளது.
செந்தூல் சிஐடி பிரிவைச் சேர்ந்த (Lans Koperal) சித்தி நூருல் ஹவானா அம்ரனின் (Siti Nurul Hawana Amran) தாயார் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் கடந்த 20ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் காலமானார்.
அடுத்த 6 மணி நேரத்தில் 56 வயதான அவரது தந்தை அம்ரனும் கொவிட் பாதிப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இத்துடன் அவரது சோகம் முடிவுக்கு வரவில்லை.
சித்தி நூருல் ஹவானா அம்ரனின் 20 வயதே நிரம்பிய சகோதரரும் கொவிட் 19 நோய்க்கு பலியாகி உள்ளார். மே 23ஆம் தேதி காலை 6 மணி அளவில் சுங்கை பூலோ மருத்துவமனையில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது.
இறைவனால் விதிக்கப்பட்டதை தாம் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார் சித்தி. இந்நிலையில் இவரது மைத்துனரும் அவரது குழந்துதையும் கூட கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, காவல்துறையினரும்கூட தங்கள் குடும்பத்தாரை இழக்கவேண்டி உள்ளதாக செந்தூல் OCPD உதவி ஆணையர் Beh Eng Lai தெரிவித்துள்ளார். சித்தி நூருல் குடும்பத்தாரின் மறைவுக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
குடும்ப உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதிலும் கூட காவல்துறையினர் பொதுமக்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய இடைவிடாமல் பணியாற்றி வருவதாக அவர் கூறியுள்ளார்.