
செய்திகள் மலேசியா
வீடு வீடாகச் சென்று பரிசோதனை: சிலாங்கூர் அரசாங்கம் பரிசீலனை
ஷா ஆலம்:
சிலாங்கூர் மாநிலத்தில் வீடு வீடாகச் சென்று கொரோனா கிருமித்தொற்று பரிசோதனை செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமீருதீன் ஷாரி தெரிவித்துள்ளார்.
எனினும், இது மிகப்பெரிய திட்டம் என்றும் இதைச் செயல்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட வேண்டும் என்றும் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
"வீடு வீடாகச் சென்று கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ள மிகப்பெரிய குழு தேவைப்படும். அப்போதுதான் இத் திட்டம் சாத்தியமாகும். எனவே, எத்தனை பேர் இதில் பங்கேற்க உள்ளனர் என்பது தெரியவேண்டும். மனித ஆற்றல் தன்னார்வலர்களின் எண்ணிக்கையைச் சார்ந்தே இந்த ஆலோசனையைச் செயல்படுத்த முடியும்," என்றார் டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரி.
கடந்த சில தினங்களாக நாட்டிலேயே கொரோனா கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக சிலாங்கூர் உள்ளது. அங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அன்றாடம் பாதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதையடுத்து தொற்றுப் பரவலைத் தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.