
செய்திகள் மலேசியா
அலட்சியம் மற்றும் கவனக்குறைவால் விபத்து நிகழ்ந்துள்ளது: அமைச்சர் விளக்கம்
புத்ராஜெயா:
இரு எல்.ஆர்.டி. ரயில்கள் மோதி விபத்து நிகழ மனிதத் தவறுதான் காரணம் என போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.
சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு ரயில் மற்றொரு ரயில் மீது மோதி விபத்து நிகழ்ந்ததாக அவர் இன்று கூறினார்.
சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்த ரயில் டாங் வாங்கி ரயில் நிலையம் நோக்கிச் சென்றிருக்க வேண்டும் என்றும் ஆனால் அவ்வாறு செல்லாமல் அது எதிர் திசையில் சென்று கே.எல்.சி.சி. நிலையத்தின் அருகே இருந்த ரயில் மீது மோதி விட்டதாகவும் அவர் விவரித்தார்.
இவை தொடக்க நிலை விசாரணைகளின்போது தெரியவந்த விவரங்கள் என்றும் குறிப்பிட்ட அவர், டி.ஆர்.40 எண் கொண்ட ரயிலை இயக்கிய ஓட்டுநரின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவால் விபத்து நிகழ்ந்துள்ளது என்றார்.
தெற்கே செல்லவேண்டிய ரயிலை அவர் வடக்கு நோக்கி செலுத்தியதாகவும், அந்த ரயில் டாங் வாங்கி நோக்கிச் செல்வதாக மற்றொரு ரயிலான டி.ஆர்.81க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். நேற்று நிகழ்ந்த விபத்தில் 200க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர் என்றும் அவர்கள் அனைவருக்கும் உரிய மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதகாவும் அமைச்சர் தெரிவித்தார்.
காயமடைந்த 64 பேரில் 6 பேருடைய நிலைமை மோசமாக உள்ளது என்றும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் குறிப்பிட்ட அவர், 43 பேர் வெளி நோயாளிகளுக்குரிய சிகிச்சையை பெற்றதாகக் கூறினார்.
மேலும், இந்த விபத்துக் குறித்து விசாரிக்க 9 பேரைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு அமைத்துள்ள இக்குழு விரிவான விசாரணை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் வீ கா சியோங் குறிப்பிட்டார்.
இந்த விசாரணைக் குழுவுக்கு போக்குவரத்து அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ இசாம் இசாக் Datuk Isham Ishak தலைமை ஏற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.