
செய்திகள் மலேசியா
ஆசைகளைத் துறந்த புத்தருக்கான இந் நன்னாளில் நாமும் நமது ஆசைகளை ஒதுக்கிவிட்டு தனித்திருந்து, விழிப்புடன் இருந்து கொரோனாவிலிருந்து மீண்டு வருவோம்: டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் விசாக தின வாழ்த்துச் செய்தி
கோலாலம்பூர்:
உலகெங்கும் இன்று கொண்டாடப்படும் விசாக தினத்தை முன்னிட்டு புத்தமதத்தைப் பின்பற்றி, புத்தர் பெருமானை வழிபடும் பெளத்தர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது வாழ்த்துச் செய்தியில் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
"உலகின் துன்பங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஆசைதான் என்ற உன்னத தத்துவத்தினை உலகிற்குப் போதித்தவர் புத்தர் பெருமான். மனிதநேயம், ஜீவகாருண்யம், அன்பு, ஒழுக்கம் போன்ற நற்பண்புகளை உலகிற்கு எடுத்தியம்பிய புத்தரின் பிறப்பு, ஞானம் அடைந்தது மற்றும் நினைவு நாள் ஆகிய அனைத்தையும் நினைவுகூரும் நாளாக இந்த விசாக தினம் இருந்து வருகிறது.
"அரச குடும்பத்தில் பிறந்திருந்தாலும், முதுமை, நோய், இறப்பு இந்த மூன்றையும் கண்டு உலகவாழ்வின் பற்றைத் துறந்து, அன்பைப் போதிக்கும் சமயங்களில் ஒன்றான பௌத்த சமயத்தை நிறுவியவர் கௌதம புத்தர். சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து அரிய பல போதனைகளை வழங்கி மறைந்தவர். இத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அவரது போதனைகள் இன்றைய நடப்புக்கும் பொருத்தமானவையாக இருக்கின்றன.
"மனிதனின் ஆசைகளால் நாம் இயற்கையை அழித்தோம், இன்று இயற்கை நம்மை அழிக்கிறது. அன்றே உலக ஆசைகளைத் துறந்தால் துன்பமில்லை என்று சொல்லிச் சென்றவர் புத்தர். கொரோனா மனித ஆசையால் உருவானதா, இயற்கையின் பாடமா? எதுவாக இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தனியாக வாழ்ந்தால் தான் இந்தத் தொற்றிலிருந்து விடுபட முடியும்.
"ஆசைகளைத் துறந்த புத்தருக்கான இந் நன்னாளில் நாமும் நமது ஆசைகளை ஒதுக்கிவிட்டு தனித்திருந்து, விழிப்புடன் இருந்து கொரோனாவிலிருந்து மீண்டு வருவோம்.
“புண்ணியம் செய்வதே சிறந்த அறம்” என்கின்ற புத்தரின் சிந்தனை இந்த காலக்கட்டத்திற்கு மிகவும் பொருந்தும். கொரோனாவினால் வாழ்வாதாரத்தை இழந்து துன்புறும் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்வோம்.
"கெளதம புத்தரைக் கொண்டாடும் இந்நன்னாளில் அவரின் தத்துவங்களையும், போதனைகளையும் கடைப்பிடிப்போம்.
வீட்டிலேயே இருப்போம், கொரோனாவை ஒழிப்போம். அனைவருக்கும் விசாக தின வாழ்த்துகள்".
இவ்வாறு தனது விசாக தினச் செய்தியில் வாழ்த்துகளைத் தெரிவித்து இருக்கிறார் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன்.