
செய்திகள் மலேசியா
நாடு முழுவதும் முழு அடைப்பு: ஜூன் 1 முதல் 14 வரை: பிரதமர் அலுவலகம் அறிவிப்பு
கோலாலம்பூர்:
மலேசியாவில் ஜூன் 1ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை பிரதமர் அலுவலகத்தில் இருந்து இந்த அறிவிப்பு வெளியானது.
கடந்த சில தினங்களாகவே நாடு முழுவதும் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. இந்நிலையில் இதுவரை இல்லாத உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 8290 பேர் புதிதாக கிருமித்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
இந்த எண்ணிக்கை அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே முழு ஊரடங்கு குறித்த அறிவிப்பை பிரதமர் அலுவலகம் வெளியிட்டது.
கடந்த வியாழக்கிழமை வரை நோன்புப் பெருநாளுடன் சம்பந்தப்பட்ட தொற்றுத் திரள்கள் 24ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் விடுமுறையின் போது தொற்றுப் பரவல் அதிகரித்ததாகத் தெரிகிறது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான படுக்கைகள் கிட்டத்தட்ட நிரம்பி விட்டன. எனவே பொதுமக்கள் SOPகளை முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும் என்ற அரசாங்கத் தரப்பில் வலியறுத்தப்பட்டது.
இதேவேளையில் பல்வேறு தரப்பினரும் இரண்டு வாரங்களுக்காவது முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தினர். இந்நிலையில் இன்று மாலை பிரதமர் அலுவலகம் தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.