
செய்திகள் மலேசியா
ஏன் முடக்க நிலையை அறிவித்தது அரசாங்கம்: 'நம்பிக்கை' கண்ணோட்டம்
கோலாலம்பூர்:
கடந்த ஆண்டு கொரோனா கிருமித் தொற்றுப் பரவலைத் தடுக்க மார்ச் 18ஆம் தேதி மலேசியாவில் நாடு தழுவிய அளவில் முழுமையான முடக்கநிலை (நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை) அமல்படுத்தப்பட்டது.
அப்போது தொற்றுப் பரவல் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து மிக விரைவாக மற்ற நாடுகளைக் காட்டிலும் இயல்பு வாழ்க்கையை நோக்கி நகரத் தொடங்கியது மலேசியா.
இந்நிலையில் நாட்டில் மீண்டும் முழுமயான MCO அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை அரசாங்கம் எடுக்குமுன் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
ஐந்து நாட்களாக அதிர்ச்சி தந்த தொற்று, இறப்பு எண்ணிக்கை:
அண்மைய சில தினங்களாகவே நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா கிருமித்தொற்று அதிகரித்து வந்தது. அதிலும் குறிப்பாக இறப்பு விகிதமும் கூடியது.
மே 24 முதல் மே 28ஆம் தேதி வரையிலான 5 நாட்களில் தொற்றுப் பாதிப்பு குறித்த தகவல்கள் மலேசிய அரசுக்கு ஆறுதல் தரும் வகையில் இல்லை.
MCO காலகட்டத்திலும்கூட தொற்று எண்ணிக்கை அதிகரித்தது மக்கள் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியது.
மே 24ஆம் தேதி 6,509 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
61 மரணங்கள் பதிவாகின.
மே 25ஆம் தேதி 7,289 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 60 பேர் உயிரிழந்தனர்.
மே 26ஆம் தேதி 7,478 புதிய தொ ற்றுச் சம்பவங்களும், 63 உயிரிழப்புகளும் பதிவாகின.
மே 27ஆம் தேதி புதிய தொற்று, மரணச் சம்பவங்களின் எண்ணிக்கை 7,857 ஆகவும் 59ஆகவும் பதிவாகின.
இந்நிலையில் இன்று மே 28ஆம் தேதி இதுவரை இல்லாத உச்சமாக மலேசியாவில் 8,290 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 61 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரதமர் தலைமையில் பாதுகாப்பு மன்ற கூட்டம்:
இந்த எண்ணிக்கை அறிவிக்கப்பட்டதை அடுத்து புத்ராஜெயா அதிரடி அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப இன்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தேசிய பாதுகாப்ப மன்றக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார்.
அவரது தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அத்தியாவசிய பொருளியல் மற்றும் சேவை துறைகளைத் தவிர மற்ற அனைத்து துறைகளும் மூடப்படும் என முடிவெடுக்கப்பட்டது. இதுதொடர்பான பட்டியலை தேசிய பாதுபாப்பு மன்றம் வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்தே முழு அளவிலான MCO குறித்து பிரதமர் அலுவலகம் மிக விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
பில்லியன் கணக்கான ரிங்கிட் இழப்பு, செலவு: சுட்டிக்காட்டிய பிரதமர்
நாட்டில் கிருமித்தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்ததை அடுத்து சில தரபிபனர் முழு அளவிலான முடக்கநிலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
அண்மைய பேட்டி ஒன்றில், தனிப்பட்ட வகையில் முழு அளவிலான MCOவைத்தான் தாமும் விரும்புவதாகக் குறிப்பிட்ட பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின், இதனால் அரசுக்கு ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட மற்ற பல அம்சங்களையும் பரிசீலிக்க வேண்டி உள்ளது என்று குறிப்பிட்டார்.
மேலும் கடந்தாண்டு அமல்படுத்தப்பட்ட முதலாவது முழு அளவிலான MCO காலகட்டத்தில் நாடு 2.4 பில்லியன் ரிங்கிட் தொகையை அன்றாட இழப்பாக எதிர்கொள்ள நேரிட்டது என்பதையும், பொருளாதாரத்தைத் தூண்டும் நடவடிக்கைகளுக்காக 340 பில்லியன் ரிங்கிட் தொகையைச் செலவிட வேண்டி இருந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.
அன்றே எச்சரித்தார் டாக்டர் நூர் ஹிஷாம்
இந்நிலையில் அதிகரித்துவரும் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அறிவித்துள்ள இருவார காலத்துக்கு முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வர உள்ளது.
தற்போது நாடு முழுவதும் 72 ஆயிரம் நோயாளிகள் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 808 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,552 நாட்டில் உயிரிழந்துள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் மலேசியா கொரோனாவின் கடுமையான தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் ஏற்கெனவே எச்சரித்திருந்தார்.
இதை மனதிற் கொண்டு மலேசியர்களும் தேவையின்றி வெளியே செல்லாமல் வீட்டில் இருந்தபடி தொற்றுச்சங்கிலியை உடைக்கும் அரசாங்கத்தின் இந்தத் தீவிர முயற்சிக்கு உதவ வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.