
செய்திகள் மலேசியா
உரிய ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டவர்கள் ஊரடங்கின்போது கைது செய்யப்படுவர்: உள்துறை அமைச்சர் எச்சரிக்கை
கோலாலம்பூர்:
ஊரடங்கின்போது உரிய ஆவணங்கள் இன்றி மலேசியாவில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் கைது செய்யப்படுவர் என உள்துறை அமைச்சர் ஹம்சா ஜெய்னுதீன் தெரிவித்துள்ளார்.
இமிகிரேஷன் அதிகாரிகள் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வர் என அவர் கூறினார்.
இமிகிரேஷன் துறையுடன், தேசிய பதிவுத்துறை, காவல்துறை ஆகியனவும் இந்த நடவடிக்கையில் பங்கெடுக்க உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ஹம்சா ஜெய்னுதீன், கைது செய்யப்படுபவர்களை தடுத்து வைக்க சிறைத்துறை கூடுதல் தடுப்பு மையங்களை ஏற்பாடு செய்யும் என்றார்.
"கடந்த முறை சிறைகளில் போதுமான இடம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் இம்முறை உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஓராண்டாக பல்வேறு SOPக்கள், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகள் அமலில் உள்ளன. அதன் பிறகும் பிடிவாதமாக உள்ள வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்படுவார்கள்" என்று ஹம்சா சைனுதீன் தெரிவித்தார்.
முழு முடக்க நிலையின்போது தற்போது பணியில் உள்ள 37 ஆயிரம் பேருடன் மேலும் 18 ஆயிரம் பேர் இணைந்து, ஒட்டுமொத்தமாக 55 ஆயிரம் பேர் SOPக்கள் சரிவர பின்பற்றப்படுகின்றனவா எனக் கண்காணிப்பர் என்று அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது நாடு முழுவதும் 600 சாலைத்தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் ஹம்சா சைனுதீன், இந்த எண்ணிக்கை 800ஆக அதிகரிக்கப்படும் என்றார்.
மேலும், அரசு அமைச்சுகள், முகமைகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து சமூக மற்றும் பொருளாதார துறைகள் சார்ந்த SOPக்கள் முறையாக கடைப்பிடிக்கப் படுகின்றனவா என்பதைக் கண்டறிய திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.