
செய்திகள் மலேசியா
98 பேர் பலி: அன்றாட மரண எண்ணிக்கையிலும் இன்று உச்சம் தொட்டது மலேசியா
கோலாலம்பூர்:
கொரோனா கிருமித் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது கடைசியாக பதிவான அதிகபட்ச மரணச் சம்பவங்களைவிட சுமார் 55 விழுக்காடு அதிகமாகும்.
இதையடுத்து நாட்டில் கோவிட்-19 நோய்க்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 2,650ஆக (இன்றைய சம்பவங்களையும் சேர்த்து) அதிகரித்துள்ளது. நடப்பு மே மாதத்தில் மட்டும் இன்றைய தேதி வரை 1,141 மரணச் சம்பவங்கள் நாட்டில் பதிவாகி உள்ளன.
கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைவிட, மே மாதத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகமாகும்.
கடந்த திங்கள்கிழமை முதல் இன்று வரை உள்ள நிலவரப்படி மட்டும் 402 பேர் பலியாகி உள்ளனர் என்று சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..
பெர்லிஸ், புத்ராஜெயா ஆகிய இரு பகுதிகளைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் மரணச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
மரணமடைந்தவர்களில் ஜொகூரைச் சேர்ந்த 27 வயது இளைஞர் வயதில் சிறியவர் என்றும் சன்வே மருத்துவமனையில் 99 வயது மூதாட்டியும் உயிரிழந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
சிலாங்கூரில் 27 பேரும், கோலாலம்பூர், ஜொகூரில் தலா 14 பேர், நெகிரி செம்பிலான், கெடா மாநிலங்களில் தலா 8 பேரும், சரவாக், பினாங்கில் தலா 5 பேரும் கிருமித் தொற்றுக்குப் பலியாகி உள்ளனர்.
சபா, திரங்கானுவில் நால்வரும், பகாங்கில் மூவரும், கிளந்தான் மலாக்காவில் தலா இருவரும், லாபுனில் ஒருவரும் பலியாகி உள்ளனர்.