
செய்திகள் மலேசியா
வியட்நாம் கொரோனா திரிபு மலேசியாவில் கண்டறியப்படவில்லை: அரசு உறுதி
கோலாலம்பூர்:
அண்மையில் வியட்நாமில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா (திரிபு) மலேசியாவுக்கு இன்னும் பரவவில்லை என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
வியட்நாமில் மட்டுமே அந்த கொரோனா திரிபு காணப்படுவதாகவும் வேறு எந்த நாட்டிலும் இதுவரை அந்தத் திரிபு கண்டறியப்படவில்லை என்றும் அவர் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
அதேவேளையில் மலேசியாவுக்குள் அந்தக் கிருமித் திரிபு நுழைந்துவிடாத வகையில் கோவிட் பரிசோதனைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றார் அவர்.
"நாட்டின் எல்லைகளில் கடும் கட்டுப்பாடுகளை விதிப்பதுடன் பரிசோதனை நடவடிக்கைகளையும் அதிகப்படுத்துகிறோம். மேலும் உருமாறிய கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து மலேசியா திரும்பக்கூடியவர்களுக்கான தனிமைப்படுத்தும் காலம் 14 நாட்களில் இருந்து 21 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியா,நேப்பாளம், பாகிஸ்தான், பங்ளாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தும்," என்றார் டாக்டர் நூர் ஹிஷாம்.
இந்தியக் கொரோனா திரிபு கடந்த ஆண்டு அக்டோபரில் கண்டறியப்பட்டது. அந்தத் திரிபின் காரணமாக மகாராஷ்டிராவில் 60 விழுக்காடு அளவுக்கு கொரோனா தொற்று அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.
அதேபோல் இங்கிலாந்தில் அதிகம் பரவிய B.1.17 கொரோனா திரிபு கடந்தாண்டு செப்டம்பரிலேயே அங்கு ஊடுருவி விட்ட போதிலும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் அதன் இருப்பை இந்தாண்டு ஜனவரியில்தான் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.