
செய்திகள் மலேசியா
கிளந்தானில் ஜூன் மாதம் தினமும் ஆயிரம் பேர் பாதிக்கப்படக்கூடும்
கோத்தபாரு:
கிளந்தான் மாநிலத்தில் பதிவாகும் அன்றாடத் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அடுத்த மாதம் ஆயிரத்தை எட்டிப்பிடிக்கக்கூடும் என்று அம்மாநிலத்தின் வீடமைப்பு மற்றும் சுகாதாரக் குழுவின் தலைவர் டாக்டர் ஹிசானி ஹுசின் Dr Izani Husin தெரிவித்துள்ளார்.
சமூக அளவிலான தொற்று விகிதம் அதிகரித்துள்ளதால் இவ்வாறு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"கோத்தபாருவில் லட்சம் பேரில் 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். நோன்புப் பெருநாள் சமயத்தில் ஏராளமானோர் SOPகளை முறையாகப் பின்பற்றாததே தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம்.
"SOPகளை முறையாகப் பின்பற்றாவிடில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என மாநில அரசு எச்சரித்தபடியே இப்போது நடந்திருக்கிறது. தற்போதுள்ள நிலவரத்தைப் பார்க்கும்போது ஜூன் மாதத்தில் நாள்தோறும் பதிவாகக்கூடிய புதிய தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டிப் பிடிக்கக்கூடும்," என்றார் டாக்டர் ஹிசானி ஹுசின்.
கிளந்தான் மாநிலத்தில் நேற்று 612 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. இதையடுத்து அங்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,869ஆக அதிகரித்துள்ளது.