நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய வான்பரப்பில் நுழைந்த சீன விமானப் படை விமானங்களால் பரபரப்பு

கோலாலம்பூர்:

மலேசிய வான்பரப்பில் நுழைந்த சீன விமானப் படையைச் சேர்ந்த  விமானங்களை மலேசிய விமானப்படை விமானம் இடைமறித்தது.
சீன விமானப் படையின் செயலை ஏற்க இயலாது என மலேசியா தெரிவித்துள்ளது.

இது மலேசியாவின் இறையாண்மைக்கும் அதன் விமானங்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சந்தேகத்துக்குரிய சீன விமானங்களின் ஊடுருவலை சரவாக்கில் உள்ள விமான தற்காப்பு மையம் கண்டறிந்ததாக அரச மலேசிய விமானப் படை தெரிவித்துள்ளது.

அந்த விமானப்படை விமானங்கள் சந்தேகத்துக்குரிய வகையில் பறந்ததாகவும், சுமார் 73 ஆயிரம் அடி உயரத்தில், 290 நாட் வேகத்தில் பறந்தபடி மலேசிய வான்பரப்புக்குள் நுழைந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து லாபுவான் விமானப் படைத் தளத்திலிருந்து ஆறாவது ஸ்குவாட்ரன் பிரிவைச் சேர்ந்த போர் விமானம் அவற்றை இடைமறிக்க அனுப்பப்பட்டது.

அதன் பின்னர் சீன விமானங்கள் எந்த வழியாக வந்தனவோ அதே வழியில் திரும்பிச் சென்றன. மலேசிய வான்பரப்புக்குள் நுழைந்த சீன விமானங்கள் எந்த வகையைச் சேர்ந்தவை என்பது தெரியவந்துள்ளது.

Ilyushin Il-76  மற்றும்  Xian Y-20 வகையைச் சேர்ந்த அந்த விமானங்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக்கூடிய ஆற்றல் மிகுந்தவை. இந்தச் சம்பவம் மலேசிய இறையாண்மைக்கும் அதன் வான்பரப்பில் உள்ள விமானங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.

"மலேசியா மேற்கொண்ட நடவடிக்கையானது இந்நாட்டின் சட்டங்கள் மற்றும் அனைத்துலக விதிமுறைகளுக்கும் உட்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியுறவு அமைச்சுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது," என்று அரச மலேசிய விமானப் படை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு வெளியான ஓர் அறிக்கையில், சீன கடலோர காவல்படையும் அதன் கடற்படைக் கப்பல்களும் மலேசிய கடற்பரப்பில் 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 89 முறை ஊடுருவியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.  
அதிலும் சர்ச்சைக்குரிய  தென்சீனக் கடற்பகுதியில் இந்த ஊடுருவல்கள் நிகழ்ந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset