
செய்திகள் மலேசியா
மலேசிய வான்பரப்பில் அத்துமீறி நுழையவில்லை: சீனா திட்டவட்ட மறுப்பு
கோலாலம்பூர்:
மலேசிய வான்பரப்பில் சீன விமானங்கள் அத்துமீறி நுழையவில்லை என்றும் அவை வழக்கமான பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டிருந்ததாகவும் சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக சட்டத்தின்படி சீன ராணுவ விமானங்கள் உரிய வான்பரப்பில் பறப்பதற்கான சுதந்திரத்தைக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சீன விமானங்கள் உரிய அனுமதியின்றி மலேசிய வான்பரப்புக்குள் நுழைந்து பறந்ததாக புகார் எழுந்துள்ளது. இது நாட்டின் இறையாண்மைக்கும், மலேசிய வான்பரப்பைப் பயன்படுத்தும் விமானங்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அத்துமீறல் குறித்து பெய்ஜிங் நிர்வாகத்துக்கு தகவல் அளிக்கப்படும் என்றும், மலேசியாவுக்கான சீனத் தூதரிடம் விளக்கம் கோரப்படும் என்றும் விஸ்மா புத்ரா தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன அரசு, அந்நாட்டு விமானங்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக கூறியுள்ளது.
"இந்தப் வழமையான பயிற்சியின் மூலம் சீன விமானப்படை எந்த ஒரு நாட்டையும் குறிவைக்கவில்லை. அனைத்துலக சட்டத்தின்படியே சீன விமானங்கள் வான்பரப்பைப் பயன்படுத்தி உள்ளன. எந்த நாட்டுக்குச் சொந்தமான பகுதியிலும் சீன விமானங்கள் ஊடுருவவில்லை," என்று கோலாலம்பூரில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மலேசியா-சீனா இடையேயான உறவு நல்லவிதமாக இருந்து வருகிறது. எனினும் ஏற்கெனவே நிகழ்ந்த விமான ஊடுருவல் இருதரப்புக்கும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.