
செய்திகள் மலேசியா
மாநில அரசுகளும் தனியார் மருத்துவமனைகளும் சொந்தமாக தடுப்பூசிகள் வாங்கலாம்: கைரி
கோலாலம்பூர்:
மாநில அரசாங்கங்களும் தனியார் மருத்துவமனைகளும், தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்படாத கொரோனா தடுப்பூசிகளை சொந்த முயற்சியில் வாங்கலாம் என்று தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
சீனாவின் 'சினோபார்ஃம்' மற்றும் அமெரிக்காவின் 'மாடர்னா' ஆகிய தடுப்பூசிகளையும் மாநில அரசுகள் விரும்பினால் வாங்க முடியும் என்று குறிப்பிட்ட அவர், எந்த தடுப்பூசியாக இருப்பினும் அது உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றார்.
"மாநில அரசாங்கங்கள் சொந்தமாக தடுப்பூசி வாங்கி, அவற்றை மலேசியாவுக்கு கொண்டு வர விரும்பினால், தாராளமாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அரசாங்கம் அவர்களுக்கு உதவிகள் செய்யவும் தயார்," என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கைரி ஜமாலுதீன் குறிப்பிட்டார்.
மாநில அரசாங்கங்கள் சொந்தமாக தடுப்பூசிகள் வாங்குவதை கூட்டரசு பிரதேச அரசாங்கம் எந்த வகையிலும் தடுக்கவில்லை என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார். மேலும் மலேசியாவுக்கான தடுப்பூசிகளை விநியோகிப்பதில் ஒருதரப்பு ஆதிக்கம் நிலவுவதாக கூறப்படும் குற்றச்சாட்டையும் அவர் திட்டவட்டமாக மறுத்தார்.
"தடுப்பூசிகளை சொந்தமாக தருவிக்க விரும்பும் மாநில அரசாங்கங்களும் தனியார் மருத்துவமனைகளும் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பது மட்டுமே அவசியம். அவ்வாறு பதிவு செய்துகொள்வது ஓர் எளிய நடைமுறைதான்.
"அதே வேளையில் கூட்டரசு பிரதேச அரசாங்கம் வாங்கக்கூடிய அதே தடுப்பூசிகளை மாநில அரசாங்கங்களும் வாங்க விரும்பக்கூடும். அத்தகைய சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கூட்டரசு பிரதேச அரசாங்கத்துக்கு விநியோகிக்க வேண்டிய தடுப்பூசிகளை முழுமையாக அளிக்கும் வரை மாநில அரசுகள் காத்திருக்க வேண்டும்," என்றார் கைரி ஜமாலுதீன்.