
செய்திகள் மலேசியா
தடுப்பூசிகளைப் பெற அமெரிக்காவுடன் பேசுங்கள்: அரசுக்கு நஜிப் ஆலோசனை
கோலாலம்பூர்:
அமெரிக்காவிடம் கூடுதலாக கையிருப்பில் உள்ள கொரோனா தடுப்பூசிகளைப் பெறுவதற்கு அந்நாட்டுடன் மலேசிய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் ஆலோசனை வழங்கி உள்ளார்.
இதன் மூலம் நாட்டில் செயல்படுத்தப்படும் தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி விநியோகத்தை துரிதப்படுத்த முடியும் என்று அவர் தமது சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டனும் தடுப்பூசி தொடர்பான தனது இலக்கை அடையும்போது கைவசம் கூடுதல் தடுப்பூசிகளை வைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நஜிப் கூறியுள்ளார்.
"முன்பே வாக்குறுதி அளித்தபடி, தன்வசம் உள்ள 80 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை எப்படி விற்கப் போகிறது, விநியோகிக்கப் போகிறது என்பதை அடுத்த இரு வாரங்களில் அமெரிக்க அறிவிக்க உள்ளது.
"இந்த நடவடிக்கையில் எந்தவித அரசியலுக்கும் இடம்கொடுக்காமல் சமமாக விநியோகிப்பதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
"தடுப்பூசிகளைப் பெறுவதில் மலேசியாவுக்கு முன்னுரிமை தருவதற்கான தகுதியை நாம் பெற்றுள்ளோம். தாய்லாந்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள நிலையிலும் அந்நாட்டுக்கு தடுப்பூசிகள் தருவதற்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது," என்று நஜிப் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகளை விநியோகிப்பதில் வளர்ந்த நாடுகள் சமநிலையைக் கடைப்பிடிப்பதில்லை என்று புத்தாக்க மற்றும் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் கைரி ஜமாலுதீன் முன்னர் சாடியிருந்தார். இத்தகைய பாகுபாடு காரணமாகவே மலேசியாவில் தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி செலுத்தும் விகிதம் குறைவாக உள்ளது என்றும் குறைவான தடுப்பூசிகள் மட்டுமே மலேசியாவுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து முன்னாள் பிரதமர் நஜிப் ஆலோசனை வழங்கியுள்ளார்.