
செய்திகள் மலேசியா
மலேசிய வான்பரப்பில் சீனாவின் ஊடுருவல்: அமெரிக்கா கண்டனம்
வாஷிங்டன்:
அமெரிக்க விமானப்படையின் பசிபிக் பிரிவு தளபதி ஜெனரல் கென்னத் வில்ஸ்பேச் (General Kenneth Wilsbach) மலேசியா மற்றும் தாய்வான் வான்வெளியில் சீன விமானப்படையின் விமானங்கள் ஊடுருவியதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இத்தகைய ஊடுருவல் நடவடிக்கையானது வட்டார உறவுகளின் ஸ்திரத்தன்மையைக் குலைத்துவிடும் என அமெரிக்கா கூறியுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான ஊடுருவல் நடவடிக்கைகள் வட்டார ஸ்திரத்தன்மையைக் குலைப்பதற்கு பங்களிப்பு செய்யும் என்றும் நிலைமையை மேலும் உக்கிரப்படுத்தும் என்றும் ஜெனரல் கென்னத் வில்ஸ்பேச் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் தாய்வான் பகுதியை சீனாவின் ஓர் அங்கமாக்க கருதவேண்டும் என பீஜிங் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் தென்சீனக் கடலின் மேல் சீன விமானங்கள் பறந்து சென்றது வழக்கமான பயிற்சி நடவடிக்கைதான் என்றும் மலேசிய வான்பரப்புக்குள் ஊடுருவவே இல்லை என்றும் சீனா திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
தென்சீனக் கடலின் பெரும்பாலான பகுதி தமக்குச் சொந்தமானது என சீனா கூறுகிறது. இதற்கு வரலாற்றுப்பூர்வ ஆதாரங்கள் இருப்பதாகவும் அந்நாடு கூறுகிறது.
இந் நிலையில் சீனாவின் இந்தக்கூற்றை ஏற்பதற்கு கடந்த 2016ஆம் ஆண்டு அனைத்துலகத் தீர்ப்பாயம் மறுத்து விட்டது.
அண்மைய சில மாதங்களாக தாய்வான் வான்பரப்புக்குள் சீன விமானங்கள் அடிக்கடி ஊடுருவுவதாக வெளியாகும் தகவல்கள் அந்த வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருவதாகக் கருதப்படுகிறது.
"இதன்மூலம் தாய்வானின் விமானப்படை செலவினங்களை அதிகப்படுத்த வேண்டும் என்பதே சீனாவின் வியூகமாக இருக்கக்கூடும். ஏனெனில் ஒவ்வொரு ஊடுருவல் நடவடிக்கையின்போதும் எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தாய்வான் விமானப்படை தள்ளப்படும்," என்று ஜெனரல் கென்னத் வில்ஸ்பேச் தெரிவித்துள்ளார்.