நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

டேக் இட் ஈசி ஊர்வசி

94 ஆம் ஆண்டில்தான் ஏ.ஆர். ரஹ்மான் முதன்முதலில் அதிக படங்களுக்கு இசையமைத்தார்..மொத்தம் ஏழு படங்கள்..நான்கு படங்களின் ஆல்பங்கள் மெகா ஹிட்( டூயட், காதலன், கருத்தம்மா, மே மாதம்) ..பவித்ரா, வண்டிச்சோலை சின்ராசுவிலும்  பாடல்கள் நன்றாகவே இருக்கும்..

அப்போது பள்ளி, கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களை அவர் வாரிச் சுருட்டி தன் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டது 'காதலன்' ஆல்பம் மூலமாகத்தான்..

ஏற்கனவே, ஷங்கர் - ரஹ்மான் கூட்டணி ஜென்டில்மேனில் கலக்கியதால் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது‌.பிரபுதேவாவும் கூடுதலாக  இணைந்து கொள்ள மைக்கேல் ஜாக்சன் போட்டது மாதிரி ஒரு ஆல்பம் (என் வரையில் அதற்கும் மேலே) தமிழுக்குக் கிடைத்தது..

'ஊர்வசி ஊர்வசி ' பாடல் தொடங்குவதற்கும் பாடலின் போக்கிற்கும் சம்பந்தமே இருக்காது..எங்க நன்னிமா முதன்முதலாக இந்தப் பாடல் ஒலித்ததைக் கேட்ட போது முக்காடை இழுத்துத் தலையில் போட்டுக் கொண்டார்..'மர்ஹபா மர்ஹபா' என்று ரஹ்மான் இழுக்கும் போது தர்ஹாவின் நடை வாசல் திறக்கிற மாதிரி ஒரு உணர்வுதானே தோன்றியிருக்கும்?.. அடுத்து சாரங்கி ஒலி..பெருந்தலைகள் போய்ச் சேர்கிற போது தூதர்ஷனில் ஒலிக்கும் சாரங்கியை ரஹ்மான் இந்த அடிப்பாட்டுக்கு முன்னால் பயன்படுத்தியிருப்பார்... அன்று டீக்கடைகளில், பேருந்துகளில், கல்லூரி விழாக்களில் ஊர்வசி ஒலிக்காத இடமில்லை..ரஹ்மானுடன் ஷாகுல் ஹமீது, சுரேஷ் பீட்டர்ஸ் ஆகிய இருவரும் இணைந்து அதகளம் பண்ணியிருப்பார்கள்..

ஆல்பத்தின் மற்றொரு மெகாஹிட் முக்காலா முக்காபுலா. இந்தப் பாடலின் இசை, குரல்கள் (மனோ , ஸ்வர்னலதா), வாத்தியங்கள், காட்சி அமைப்பு அனைத்துமே எந்த பிரபலமான வெளி நாட்டு ஆல்பத்துக்கும் குறைந்ததில்லை.. படம் வெளிவந்த போது நான் பத்தாம் வகுப்பு மாணவன். நாங்கள் பல இடங்களில் போட்டிகளுக்குப் போகிற போது அந்த ஆண்டிலும், அடுத்த சில ஆண்டுகளிலும் நடனம் என்றாலே 'முக்காபுலாதான்'..இந்தப் பாடல் மட்டும் வாலியுடையது.. அவர் இதுபோன்ற பாடல்களை எழுதுவதற்கென்றே அவதரித்தவர். 'ஹூய்யாலா ஹூய்யாலாலா ஹூய்யாலா ஹூய்யாலாலா' என்று முணுமுணுக்காத உதடுகளை அப்போது எங்கும் பார்க்க முடியாது..எஸ்பிபி வெளிநாடு போய்விட்டால் கடத்தி வருவதற்கென்றே இளையராஜா வெயிட்டிங் லிஸ்டில் எப்போதும் வைத்திருக்கும் மனோவின் வேறொரு பரிணாமத்தை ரஹ்மான்தான் கண்டுபிடித்தார். ரொம்ப நாளாக கட்டிப் போடப்பட்டிருந்த மனோவின் குரலை ரஹ்மான் கண் காட்ட மனோ அவிழ்த்தெறிந்தார். இந்தப் பாடலில் கன்னுக்குட்டி கயிறை விட்டு பல கிலோமீட்டர் ஓடியிருக்கும்.

 பேட்டராப்' தமிழ் திரையிசைக்கு ரஹ்மான் தந்த கலாச்சார அதிர்ச்சி..அந்தப் பாடலுக்கு லிரிக்ஸ் (?) ஷங்கர்..அதில் லிரிக்ஸ் என்று என்ன இருக்கிறது? சாராயம், துண்டு பீடி, வவ்லாலு, நிஜாரு, எம்ஜிஆரு , சிவாஜி, ரஜினி, கமலு இதை எழுத எதற்கு பாடலாசிரியர்? ஒண்ணாப்பு பையனே எழுதி விடுவான். ஆனால், அந்த இசை வேறுமாதிரியானது. அது ஒரு வகையான எதிர்ப்பின் குறியீடு..அதுவும் தேனி குஞ்சரம்மா 'அம்மா பேட்டை, அய்யம் பேட்டை, தேனாம்பேட்டை தேங்கா மட்ட ' என்று இழுக்கும் போது வருகிற உணர்வு அலாதியானது. 'தேனாம்பேட்டை ராணிப்பேட்டை குரோம்பேட்டை பேட்டராப்' என்று உச்சஸ்தாயியில் கத்தும் போது விழுகிற அடி இருக்கிறதே, அந்த அடிதான் பாடலின் செய்தி..இதற்குப் பிறகு எவ்வளவோ பேர் இதே மாதிரி முயற்சித்தார்கள். ஆனால், தமிழில் இந்தக் குறிப்பிட்ட வகைமையில்  'பேட்டராப்' செய்த மாயத்தை வேறு எதுவாலும் செய்ய முடியவில்லை. (இப்போது சந்தோஷ் நாராயணன்  நல்ல ராப் பாடல்களை தருகிறார்) இதிலும் ஷாகுல் ஹமீது, சுரேஷ் பீட்டர்ஸ் இணைதான். பாடலின் இசைக்கு பிரபுதேவாவும், வடிவேலுவும்100% நியாயம் செய்திருப்பார்கள். ஆனால் எனக்கு ஒரு பெருங்குறை உண்டு. ராப் வேண்டும் என்று ரஹ்மானிடம் கேட்ட ஷங்கர் 'பாப் மார்லி' மாதிரி சமூக பிரக்ஞை கொண்ட ராப் பாடல் ஒன்றுக்கான சூழலை உருவாக்கி வைரமுத்துவையே எழுத வைத்திருந்தால் தமிழ்திரையிசைச் சூழலில் அழகான முன்னுதாரணமாக இருந்திருக்கும். ரஹ்மான் செய்த மாயங்கள் வேறொரு தளத்தை அப்போதே எட்டியிருக்கும்.

'எர்ராணி குர்ரதானி கோபாலா' பாடலின்  தொடக்க வரிகள்  மட்டுமல்ல. அந்த அடியே வழக்கமாக  தெலுங்கில் அரைக்கும் மசாலாதான். ஆனால், அதை அப்படியே விடுவாரா ரஹ்மான்? இப்படிப்பட்ட பாடலுக்கு நடுவே நம்மை சொக்க வைக்கிற புல்லாங்குழல் பிட்டை பயன்படுத்தியிருப்பார்..' அடியே உந்தேகம் ரத்தம் ஓட்டம் பாய்கிற தங்கம்...அடடா உன்நெஞ்சில் புது புதுக்கவிதைகள் பொங்கும்' இரண்டு சரணத்திலும் இந்த இடத்தை மட்டும் கேளுங்கள். அற்புதமான மெலடி பாடலைப் போல இருக்கும். அதுதான் ரஹ்மானின் மாயாஜாலம். எஸ்பிபி, ஜானகி இணைப்பில் வந்த காமரசம் சொட்டும் பாடல்களில் இது வித்தியாசமானது. இதைப் பாடும் போது ஜானகியம்மாவுக்கு கிட்டதட்ட அறுபது வயசு இருக்கும். ஆனால் நக்மாவின் தங்கச்சி போல பாடியிருப்பார்..

'குற்றாலக் குறவஞ்சி ' யின் வரிகளுக்கு (இந்திரையோ இவள் சுந்தரியோ) ரஹ்மான் அமைத்த இசை கேட்க அழகாக இருக்கும். இறுதியில் 'மனம் முந்தியதோ? விழி முந்தியதோ? கரம் முந்தியதோ? ' என்கிற இடத்தில் வருகிற மெல்லிய மௌனம்தான் பாடலின் அழகே..: (மின்மினி, சுநந்தா)

உன்னிகிருஷ்ணனை உலகறிய வைத்த ' என்னவளே அடி என்னவளே ' கேட்காதவர்களே இருக்க முடியாது. (அனிமேஷனை முதன்முதலாக பயன்படுத்திய படம்) இந்த இசைப்  படத்தில் வருவது போல் நீங்கள் எங்கிருந்தாலும் உங்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போய் பனிமலையில் போட்டு விடும். வரிகளும் செமையாக இருக்கும். 'கோபுரமே உனை சாய்த்துக் கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்' வரிகளைச் சொல்லி  கூந்தலில் எப்படி மீன்? பேன்தானே பிடிக்க முடியும் ? எனக் கேட்டு சிலரிடம் திட்டு வாங்கியிருக்கிறேன்..

உதித் நாராயணன் எனும் தமிழ் மழலை வலது கால் எடுத்து வைத்தது இந்தப் படத்தில்தான்  (காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்) எஸ்பிபி பல்லவியை மட்டுமே பாடி விட்டு தமிழ்த்தாயிடம் மன்னிப்புக் கேட்க ஓடி விடுவார். அதற்குப் பிறகு உதித்தின் தாண்டவம் தான். ஆனால் அந்தக் குரல் வித்தியாசமான குரல்‌‌. ரஹ்மானுக்கு விதவிதமான குரல்கள் வேண்டும். உண்மையில் அவர் காதலித்துக் கல்யாணம் செய்திருந்தால் ஒரு மிமிக்ரி பாடகியைத்தான் கட்டியிருப்பார். எல்லோரும் சரீரத்தில் தேடினால் சாரீரத்தில் புதுமை தேடும் குரல் காமுகன் அவர்.‌‌ உதித்தின் குரல் குழந்தை குணமும், அடியாள் போன்ற தோற்றமும் கொண்ட ஒரு அஜ்னபி (வெளிஆள்) யின் குரல். சிந்தும் வேர்வ தேர்த்தமாkum (சிந்தும் வேர்வை தீர்த்தமாகும்) என்று பாடினாலும் என் தமிழ் மனம் மன்னிக்கவே செய்யும். ( நான் எப்போதுமே மொழி விஷயத்தில் பண்டிதர்களின் கட்சி அல்ல) 'கொய்யுக்கா ஈக்கா' என்று ஒரு வெள்ளைக்காரன் மழலைத் தமிழில் கேட்டால் புரிந்து கொண்டு  அந்தப் பழத்தை விடக் கூடுதலான கனிந்த சிரிப்புடன்' ந்தா ராசா' என்று ஒன்னு ,ரெண்டை கூடுதலாக அள்ளிப்போடும் கிராமத்துக் கிழவியின் தமிழுணர்வே என்னுடையதும். கூட பல்லவி பஞ்சு மிட்டாய் குரலில் பாடியிருப்பார். காதலில் பித்தேறிய ஒரு வெள்ளைக்கார தொரையோடு கொஞ்சம் அடங்கிய தன்மையோடு நம்ம ஊரு கல்லூரிப் பெண் பாடும் டூயட்டே இந்தப் பாடல்..

இந்த ஆல்பத்தோடு எனக்கு வேறொரு விதத்தில் நெருக்கம் உண்டு. பொதுவாக ரஹ்மானின் குட்டி குட்டிப் பாடல்கள் கேட்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்..பேருந்து நிறுத்தத்தில் வாய்க்கும் ஜன்னலோர அழகிகளின் தரிசனத்தைப் போல் 'அடடா போய்விட்டதே' என்கிற ஏக்கத்தைத் தருபவை அவை.. ஜெயச்சந்திரன் காதலிக்கான தாலாட்டொன்றை பாடியிருப்பார்.  (மரக்கிளையில் தொட்டில் கட்ட, மாமனவன் மெட்டுக் கட்ட அரண்மனையை விட்டு வந்த அல்லி ராணி கண்ணுறங்கு) அந்தப் பாடலை நான் எல்லா வகுப்பறைகளிலும் பாடியிருக்கிறேன்..என் மாணவர்களுக்கு என்னைப் பற்றி  யோசித்தால் வரும் ஞாபகங்களில் இதுவுமொன்று..

வித்தியாசம்தான் ரஹ்மான். தொண்ணூறுகளில் நிகழ்ந்த பல்வேறு சமூக மாறுதல்களின் தாக்கங்களை மனதில் சுமந்திருந்த ஒரு புதிய தலைமுறைக்கு ரஹ்மானின் இசை வாராது வந்த பேரலை...

- மானசீகன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset