
செய்திகள் மலேசியா
மாமன்னருடன் சந்திப்பா?: இதுவரை இல்லை என பாரிசான் தலைவர்கள் மறுப்பு
கோலாலம்பூர்:
மாமன்னர் அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தங்களுக்கு அது தொடர்பாக அரண்மனையில் இருந்து எந்தவோர் அழைப்பும் வரவில்லை என பாரிசான் கூட்டணியின் உறுப்புக் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மஇகா தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், ம.சீ.ச.வின் வீ கா சியோங், அம்னோ தலைவர் டத்தோ ஸாஹிட் ஹமிதி ஆகிய மூவரும் மாமன்னரிடம் இருந்து அழைப்பு வரவில்லை என்பதை இன்று உறுதி செய்துள்ளனர்.
இதேபோல் பெரிக்கத்தான் நேசனல் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கெராக்கான் கட்சித் தலைவர் டொமினிக் லாவ் இந்தத் தகவல் வெறும் வதந்தியாக இருக்கலாம் என்றும் பிரதமர் மொஹைதீன் யாசின் தலைமையிலான அரசாங்கத்துக்கு மேலும் அழுத்தம் தரவேண்டும் எனும் நோக்கம் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
அரசியல் கட்சித் தலைவர்களும் கட்சிகளும் சுயநலத்தை மட்டும் பாராமல் கொரோனா தொற்றை வெல்வதற்காக போராடிக் கொண்டிருக்கும் அரசாங்கத்துக்கு உதவவேண்டும் என்றும் டொமினிக் வலியுறுத்தி உள்ளார்.
இணைய ஊடகம் ஒன்று மாமன்னர் புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் அமலில் உள்ள அவசரநிலை ஆகஸ்ட் 1ஆம் தேதி முடிவுக்கு வருவது குறித்தும் நாடாளுமன்றத்தைக் கூட்டுவது குறித்தும் மாமன்னருடனான சந்திப்பின்போது விவாதிக்கப்படலாம் என்றும் ஆரூடச் செய்தி வெளியானது.
இந்நிலையில் தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்கு இத்தகைய சந்திப்பு தொடர்பாக எந்தத் தகவலும் வரவில்லை என தெளிவுபடுத்தியுள்ளனர்.