
செய்திகள் மலேசியா
தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பாத பூர்வகுடி மக்கள்: அமைச்சர் தகவல்
புத்ராஜெயா:
தடுப்பூசி போட்டுக்கொள்ள பெரும்பாலான பூர்வகுடியினர் (Orang asli) விரும்பவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மொத்தமுள்ள 79,041 பூர்வகுடி மக்களில் 15,307 பேர் மட்டுமே தடுப்பூசி திட்டத்தின் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளதாக ஊரக வளர்ச்சி துணை அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான் முஹம்மது (Datuk Seri Abdul Rahman Mohamad) தெரிவித்துள்ளார்.
"தடுப்பூசிக்காக மிகக் குறைவான எண்ணிக்கையிலானவர்களே தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்டால் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் இறக்க நேரிடும் என்று பலரும் பயப்படுகின்றனர். இந்த அச்சத்தின் காரணமாகவே தங்கள் பெயரைப் பதிவு செய்ய அவர்கள் முன்வரவில்லை," என்று துணை அமைச்சர் அப்துல் ரஹ்மான் மொஹமது கூறியதாக பெர்னாமா செய்தி தெரிவிக்கிறது.
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் பெயரைப் பதிவு செய்ய தகுதி வாய்ந்த 120,000 பேருக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், 79,041 பேர் மட்டுமே விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து திரும்பக் கொடுத்ததாகத் தெரிவித்தார்.
தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பூர்வகுடியினர் மத்தியில் குறைவாக இருப்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் இதுவரை 3,018 பூர்வகுடி மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பூர்வகுடி மக்கள் முன்னேற்றத்துறை மற்றும் இதர துறைகளுடனும் இணைந்து அம்மக்கள் மத்தியில் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விரிவாக விவரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என துணை அமைச்சர் தெரிவித்தார்.
"ஒருவேளை தடுப்பூசி குறித்து அவர்களுக்கு விரிவான விளக்கங்கள் கிடைக்காமல் போயிருக்கலாம். எனவே எங்களது வியூகங்களை மறு ஆய்வு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து பூர்வகுடி மக்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுரை வழங்கப்படும். அதன்பின்னர் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரக்கூடும்," என்றார் துணை அமைச்சர் அப்துல் ரஹ்மான் முஹம்மது.