
செய்திகள் மலேசியா
அவசரநிலையை நீட்டிக்க வேண்டாம் என மாமன்னரிடம் கேட்டுக்கொண்டேன்: அன்வார்
புத்ராஜெயா:
ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குப் பிறகு அவசர நிலை பிரகடனத்தை நீட்டிக்க வேண்டாம் என மாமன்னரிடம் தாம் கோரிக்கை விடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
இன்று மாமன்னரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவசரநிலை நீட்டிக்கப்பட்டால் நாட்டின் பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகள் ஏற்படும் என தாம் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
"அவசரநிலை நீடிப்பால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது உள்ளிட்ட கருத்துகளை பகிர்ந்துகொண்டோம். மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும். அவசரநிலைக்கு அவசியம் இல்லை.
எனவேதான் அதை நீடிக்க வேண்டாம் என மாமன்னரிடம் கோரிக்கை விடுத்தோம்.
"தற்போதைய நிலவரம் வரை மாமன்னர் அனைத்து விவரங்களையும் அறிந்து வைத்துள்ளார்," என்றார் அன்வார் இப்ராஹிம்.
முன்னதாக, மாமன்னரைச் சந்திப்பதற்காக இன்று காலை 10.35 மணியளவில் அரண்மனை வந்து சேர்ந்தார் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.
இதற்கிடையே, புதிய அரசாங்கம் அமைப்பது குறித்து மாமன்னருடன் பேசவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.
இத்தகைய ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று காலை மாமன்னரை, பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதின் யாசினும் சந்தித்துப் பேசினார். மேலும் பல அரசியல் கட்சித் தலைவர்களை மாமன்னர் அடுத்தடுத்து சந்திக்க உள்ளார்.