
செய்திகள் மலேசியா
எஸ்பிஎம் 2020 முடிவுகள்: கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் தேசிய சராசரி தேர்ச்சி தரம் சிறிதளவு முன்னேற்றம்: கல்வி அமைச்சர்
கோலாலம்பூர்:
பள்ளி இறுதித் தேர்வான 2020 சிஜில் பெலஜரன் மலேசியா (எஸ்பிஎம்) முடிவுகள் கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்பட்ட அறைகூவல்களுக்கு மத்தியில் 2019 ஆம் ஆண்டில் 4.80 இலிருந்து 4.86 என்ற சிறந்த தேசிய சராசரி தரத்தை (ஜிபிஎன்) அடைந்துள்ளது. இதனைக் கல்வி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சர் டத்தோ மொஹம்மத் ராட்ஸி முஹம்மது ஜிடின், "நாடு முழுவதும் 401,105 மாணவமாணவிகளில் சுமார் 88.68 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் SPM சான்றிதழைப் பெற தகுதியுடையவர்கள், இது முந்தைய ஆண்டை விட 1.96 சதவீதம் (86.72 சதவீதம்) அதிகரித்துள்ளது" என்றார்.
83 பாடங்களில் 43 செயல்திறன் முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாகவும், 39 பாடங்கள் சரிவைப் பதிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் ராட்ஸி கூறினார்.
நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களின் செயல்திறன் பற்றி கூறுகையில், நகர்ப்புறங்களில் ஜி.பி.என் 4.68 ஆகவும் (கடந்த ஆண்டு 4.70 உடன் ஒப்பிடும்போது), கிராமப்புறங்களில் 5.06 ஆகவும், 2018 ல் 5.14 ஆகவும் மேம்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட தேதிகளில் இருந்து தேர்வுகள் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் (2020) இந்த ஆண்டு பிப்ரவரி 22 முதல் மார்ச் 25 வரை நடைபெற்றது.
அமைச்சு வழங்கிய ஒட்டுமொத்த பகுப்பாய்வு அறிக்கையின்படி, மொத்தம் 9,411 மாணவமாணவிகள் அல்லது 2.46 சதவீதம் பேர்
(Straight) A புள்ளிகள் பெற்றுள்ளனர்.
இது முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டு 535பேர் அதிகம் தேர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
2020 எஸ்பிஎம் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை பின்வரும் அகப்பக்கத்தில் சரிபார்க்கலாம்.
myresult1.moe.gov.my மற்றும் myresult2.moe.gov.my.
கோவிட் -19 நடமாட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக எஸ்பிஎம் முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டிருக்கிறது என்று கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.