
செய்திகள் மலேசியா
தற்போதைய சூழலில் பொதுத்தேர்தலை நடத்துவது மிகவும் ஆபத்தானது: துன் மகாதீர்
கோலாலம்பூர்:
தற்போதைய சூழலில் பொதுத்தேர்தலை நடத்துவது மிகவும் ஆபத்தானது என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.
இன்று மாமன்னருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு தழுவிய அளவில் அமலில் உள்ள அவசர நிலை பிரகடனத்தை முடிவுக்குக்கொண்டு வருவது குறித்து தாம் மாமன்னருடன் ஏதும் விவாதிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
"அவசரநிலை எப்போது முடிவுக்கு வரும் என்பதற்கான அறிகுறி ஏதுமில்லை. எனினும் அடுத்த ஆண்டிலோ அல்லது வெகு விரைவிலோ தேர்தலை நடத்தலாமா என்று மாமன்னர் கேட்டார். சபா மாநிலத் தேர்தலின்போது என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம். தேர்தல் நடந்தால் தொற்றுப் பரவல் அதிகரிக்கும். எனவே தேர்தலை நடத்துவது ஆபத்தானது என்ற கருத்தை மாமன்னரிடம் தெரிவித்தேன்," என்றார் துன் டாக்டர் மகாதீர் முஹம்மது.
எப்போது தேர்தல் நடக்கும், அல்லது நடத்தப்பட வேண்டும் என்று செய்தியாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த லங்காவி தொகுதி எம்பியுமான அவர், நாடு மந்தை நோய் எதிர்ப்புச் சக்தி நிலையை எட்டியதும் தேர்தலை நடத்தலாம் என்றார்.
மேலும் நாட்டில் 80 விழுக்காட்டு மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்ட பின்னர் தேர்தலை நடத்துவது பாதுகாப்பாக இருக்கக்கூடும் என்றார் அவர்.
"எனினும் அதற்கு முன்னால் தேர்தலை நடத்தினால் சபா சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்தது நாடு முழுவதும் நடக்கக்கூடிய ஆபத்து உண்டு. நடப்பு அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மாமன்னருடன் பேசினேன். அப்போது இந்த அரசாங்கத்தால் தற்போது நிலவும் நெருக்கடி நிலையைக் கையாள முடியவில்லை என்பதே பெரும்பாலான மலேசியர்களின் கருத்தாக உள்ளது என்று எடுத்துச் சொன்னேன்.
"மக்கள் நடப்பு அரசாங்கத்துடன் அசௌகரியமாக உணர்வதாகவும், இதை தோல்வியுற்ற அரசாங்கமாக மக்கள் பார்க்கின்றனர். சமூக விவகாரங்கள் குறித்த கவலையையும் வெளிப்படுத்தினேன். தற்கொலைச் சம்பவங்கள், வீட்டில் பாலியல் சீண்டல்கள், குழந்தைகளால் பள்ளிக்கூடத்துக்குப் போக முடியாதது என பல பிரச்சினைகள் உள்ளன. அரசாங்கத்தை மக்கள் நிராகரித்து விட்டனர். நடப்பு அரசாங்கத்தை அவர்கள் நம்பவில்லை என்பதே உண்மை. எனவே, புதிய அரசாங்கம் அல்லது நிர்வாக அதிகாரம் அமையவேண்டும் என்பதே மக்களின் விருப்பம்," என்றார் துன் டாக்டர் மகாதீர் முஹம்மது .