
செய்திகள் மலேசியா
தேசிய செயல்பாட்டு மன்றம் அமைக்க மாமன்னரிடம் பரிந்துரைத்தேன்; தேவைப்படின் நான் உதவத்தயார்: துன் டாக்டர் மகாதீர் வெளிப்படை
புத்ராஜெயா:
மாமன்னருடனான இன்றைய சந்திப்பின் போது தேசிய செயல்பாட்டு மன்றம் ஒன்றை உருவாக்க வேண்டும் என தாம் பரிந்துரைத்ததாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.
இதன் வழி நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார். மேலும் தற்போது நாட்டில் நிலவும் சுகாதார, பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைக் காண முடியும் என்றார் மகாதீர்.
கடந்த 1969ஆம் ஆண்டு நாட்டில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலையை மலாய் மொழியில் Mageran என்று குறிப்பிடுவர்.
அதை 95 வயதான மகாதீர் இன்று நினைவுகூர்ந்தார்.
தாம் முன்வைத்த பரிந்துரையை மாமன்னர் நிராகரிக்கவில்லை என்றபோதிலும், இத்தகைய பரிந்துரை அரசாங்கத்திடம் இருந்து வர வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியதாக மகாதீர் தெரிவித்தார்.
"நாம் Mageran போன்ற ஒரு சிறப்பு அமைப்பை ஏற்படுத்தலாம். இதுதான் 1969ஆம் ஆண்டு நடைபெற்றது. எனக்கு தெரிந்த அளவில் மாமன்னர் எனது பரிந்துரையை நிராகரிக்கவில்லை. இயலாது என்றும் கூறவில்லை. அதே சமயம் Mageran அமைக்கப்பட வேண்டும் என்றால் அதற்கான பரிந்துரை அரசாங்கத்திடம் இருந்து வர வேண்டும் என்றார்.
"நடப்பு அரசாங்கத்திடம் இருந்து அப்படியொரு பரிந்துரை வரும் என நான் நம்பவில்லை. ஏனெனில் தொடக்கம் முதலே இத்தகைய பரிந்துரைக்கு எதிராக உள்ளது இந்த அரசாங்கம். அவர்களைப் பொறுத்தவரை எல்லாம் சரியாக நடந்து வருகின்றன; அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிட்டன," என்றார் துன் மகாதீர்.
எதன் அடிப்படையில் Mageran அமைப்பதை ஆதரிக்கிறீர்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிறு விளக்கம் அளித்தார் துன் மகாதீர்.
"கடந்த 1969ஆம் ஆண்டு அன்றைய துணைப் பிரதமர் துன் அப்துல் ரசாக்கால் Mageran அமைக்கப்பட்டது. அதன் மூலம் அன்றைய தேதியில் நிலவிய அரசியல், சமூகப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்பட்டது. Mageran அமைப்பானது வெறும் அரசியல்வாதிகளை மட்டும் அல்லாமல் சமூக, சுகாதார, பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கும் அனுபவம் கொண்ட நிபுணத்துவம் வாய்ந்தவர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும்.
"துன் அப்துல் ரசாக் அன்று நிலவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் எவ்வாறு செயல்பட்டார் என்பதையும், அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு நாட்டில் அமைதியும் நிலைத்தன்மையும் குடிகொண்டுள்ளன. நீண்ட காலமாக இந்த அம்சங்கள் நாட்டில் நிலைத்து நிற்கின்றன," என்று துன் மகாதீர் கூறினார்.
"அன்றாடம் பதிவாகும் அதிக எண்ணிக்கையிலான தொற்றுச் சம்பங்களையும் மரணங்களையும் கட்டுப்படுத்த Mageran போன்ற அமைப்பு கைகொடுக்கும். எந்தெந்த வகையில் பெஜுவாங் கட்சியால் பங்களிக்க முடியும் என்பதை அடையாளம் கண்டுள்ளோம். தலைவர்களாக மட்டுமே சேவையாற்றுவோம் என்பதல்ல; Mageran போன்றதொரு அமைப்பு இருக்கும் எனில் எங்கள் பங்களிப்பை அளிக்க விரும்புகிறோம்.
"பிரச்சினைகளை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது குறித்து எங்களிடம் நிறைய கருத்துகள், ஆலோசனைகள் உள்ளன. தேவைப்படின் நான் உதவத்தயாராக இருக்கிறேன். எனினும் Mageran போன்ற அமைப்பு இல்லை எனில் எங்களது பரிந்துரைகளை அமல்படுத்தவோ செயல்படுத்தவோ இயலாது," என்றார் துன் மகாதீர்.