
செய்திகள் மலேசியா
துணைப் பிரதமர் பதவி விவகாரம்: பிரதமர் அலுவலகம் திட்டவட்ட மறுப்பு
புத்ராஜெயா:
துணைப் பிரதமர் பதவி தொடர்பாக வெளியான தகவலை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
பல்வேறு ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள் வெளியான நிலையில், பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
துணைப் பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமிப்பது குறித்து பிரதமர் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.
அதேபோல், பிரதமர் புற்றுநோய் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் மற்றொரு வதந்தி என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் அலுவலகம், பிரதமர் புற்று நோயில் இருந்து முழுவதும் மீண்டுவிட்டதாக கூறியுள்ளது.
புற்றுநோய் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் பிரதமர் அந் நோயில் இருந்து விடுபட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர் என்றும் அந் நிபுணர்கள் பிரதமருக்கு சிகிச்சை அளித்தவர்கள் என்றும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டின் அடுத்த துணைப் பிரதமராக தாம் நியமிக்கப்பட இருப்பதாக வெளியான தகவலை வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் துன் ஹுசைன் மறுத்துள்ளார்.
இது வெறும் வதந்தி என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், இது தமக்கு எதிரான சதியாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.